திண்டுக்கல், செப். 2: மதுரை மல்லி, திருநெல்வேலி அல்வா, தஞ்சாவூர் தட்டு என்பதைப் போல, பூட்டுக்குப் பெயர் பெற்றது திண்டுக்கல். இந்தப் பூட்டுத் தொழில் தற்போது நலிவுற்று வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் இத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், தற்போது 500 தொழிலாளர்கள் மட்டுமே இத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
கூலி குறைவாகக் கிடைக்கும் காரணத்தினால் புதியவர்களும், இளைஞர்களும் இத் தொழிலுக்கு வருவது இல்லை. இன்னும் 20 ஆண்டுகள் போனால், "திண்டுக்கல் பூட்டு' என்ற பெயர் புத்தகத்தில் மட்டுமே இடம்பெறும் நிலை ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட அனைத்து பூட்டுத் தயாரிப்பாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் ஆர். முருகன் கூறியது:
திண்டுக்கல்லில் தயாராகும் தொட்டிப் பூட்டு, மிகவும் பிரபலம். 4 அங்குலம் முதல் 8 அங்குலம் வரை, சாதா பூட்டு மற்றும் 8 லீவர் கொண்ட பூட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
இதேபோல், மாங்கா பூட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தப் பூட்டு ரூ. 70 முதல் ரூ. 250 வரை கிடைக்கிறது. அலிகார் பூட்டு விற்பனைக்கு வரத் தொடங்கியதும், மாங்கா பூட்டு விற்பனை சற்றுக் குறையத் தொடங்கி உள்ளது.
இப் பூட்டுகள் ரூ. 12 முதல் ரூ. 150 வரையிலும் கிடைக்கிறது.
சாதா 4 அங்குல தொட்டிப் பூட்டு ரூ. 125, 5 அங்குலம் ரூ. 132, 6 அங்குலம் ரூ. 153, 7 அங்குலம் ரூ. 220, 8 அங்குலம் ரூ. 240 ஆகிய விலைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. 8 லீவர் கொண்ட தொட்டிப் பூட்டுகள் 4 அங்குலம் ரூ. 185, 5 அங்குலம் ரூ. 200, 6 அங்குலம் ரூ. 220 ஆகிய விலைகளில் உற்பத்தி செய்ய முடிகிறது.
திண்டுக்கல்லில் நாளொன்றுக்கு ஆயிரம் பூட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் கைத்தொழில் மூலமாகவே தயாரிக்கப்படுகின்றன.
இப் பூட்டுகள் ஆந்திர மாநிலம் காக்கிநாடா, கர்நாடக மாநிலம் பெங்களூரு, சென்னை முதல் திருநெல்வேலி வரை விற்பனையாகின்றன. இவ்வளவு சிறப்புகள் இந்த பூட்டுத் தொழிலில் இருந்தபோதிலும், பணி ஓய்வு பெறும் தொழிலாளர்கள் அனைவரும் கடன்காரர்களாகத்தான் உள்ளனர்.
பூட்டு தயாரிக்கும் தொழிலாளிக்கு ரூ. 150 மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது. காரணம் உற்பத்திப் பொருளுக்கு விலையை இடைத்தரகர்கள் நிர்ணயம் செய்வதுதான்.
ரூ. 125-க்கு உற்பத்தி செய்யப்படும் சாதா தொட்டிப்பூட்டை கடைகளில் ரூ. 400 வரை விற்பனை செய்கின்றனர். இந்த விற்பனை விலை ஒவ்வொரு ஊருக்கும் மாறுபட்டது.
20 ஆண்டுகளுக்கு முன் இத் தொழிலைச் செய்துவந்த முன்னோர் கூலி போக ஒரு பூட்டுக்கு ரூ. 10 லாபம் கிடைத்தால் போதும் என்பதிலேயே திருப்திபட்டனர்.
இதனால்தான் தற்போது இந்தத் தொழிலில் எங்களது வாரிசுகளை நாங்கள் ஈடுபடுத்தாமல் இருந்து வருகிறோம். கடந்த 15 தினங்களுக்கு முன் கூலி உயர்வு கேட்டு தொடர்ந்து நான்கு நாள் வேலை நிறுத்தமும் செய்தோம். இதன் காரணமாக சற்று கூலி உயர்த்தித் தரப்பட்டுள்ளது.
பூட்டு உற்பத்தியாளர்களுக்கென திண்டுக்கல் சந்தையின் ஒரு பகுதி இடத்தை ஒதுக்கித் தரும்படி மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், நகர்ப்புற வளர்ச்சியின் கராணமாக நகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தை ஒதுக்கித் தருவதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இந்த இடத்தில் பணிபுரிய ஊழியர்கள் தயார் நிலையில் இல்லை.
எனவே, திண்டுக்கல் வாரச் சந்தையில் இடம் ஒதுக்கித் தர வேண்டும். மேலும் கைகளினாலே பூட்டுகள் தயாரிக்கப்படுவதால், நாளொன்றுக்கு 3 பூட்டுகள் மட்டுமே தயாரிக்க முடிகிறது. குறிப்பிட்ட வேலைகளுக்கு மட்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தினால் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
இந்த இயந்திரத்தை வழங்க காந்திகிராம அறக்கட்டளை உதவ முன்வந்தாலும், தற்போது நாங்கள் இருக்கும் இடத்தில் போதிய பாதுகாப்பு இல்லாததால், இயந்திரங்களைப் பெற முடியாத நிலையிலும் இருந்து வருகிறோம்.
பூட்டு உற்பத்தியை குடிசைத் தொழிலாக அனுமதித்து வரிவிலக்குகள் கொடுத்தால் நேரடியாகவே விற்பனை செய்ய முடியும். இதனால் பூட்டு பல கைகளுக்கு மாறி ஏற்படும் விற்பனை விலை உயர்வைத் தவிர்க்க முடியும். உற்பத்தியை அதிகரிக்க வங்கிக் கடன் வழங்கப்பட வேண்டும்.
இவை அனைத்தும் கிடைக்கும் பட்சத்தில் பூட்டு உற்பத்தி அதிகரிக்கும். அப்போதுதான் மகளிர் சுய உதவிக் குழுவினரையும், இளைஞர்களையும் இத் தொழிலில் ஈடுபடுத்த முடியும் என்றார்.
பூட்டு உற்பத்திக்கு அரசு தகுந்த உதவிகளைச் செய்ய வேண்டும். இதே நிலை நீடித்தால் திண்டுக்கல் பூட்டைக் கொண்டே பூட்டுத் தொழில் நிறுவனங்களை பூட்டும் நிலை உருவாகும் என்பது உறுதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைதி, தெளிவை எட்ட தியானம் உதவும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரயில் நீா் ஊழல்: ஆா்டிஐ விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்ய ஐஆா்சிடிசிக்கு உத்தரவு!

குன்றத்தூா் நகராட்சியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
மதுப் புட்டியால் ஒருவரை தாக்கி காயப்படுத்தியவா் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

