சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

தென்மாவட்டங்களில் சாலை விபத்துகளில் திண்டுக்கல் முதலிடம்

திண்டுக்கல், ஜூலை 23: தென்மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில்தான் அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.   தேசிய நெடுஞ்சாலைகளில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் செல்லும் சாலை எண் 7, திண்டுக்கல் முதல

Updated On :20 செப்டம்பர் 2012, 11:55 am

திண்டுக்கல், ஜூலை 23: தென்மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில்தான் அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.

  தேசிய நெடுஞ்சாலைகளில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் செல்லும் சாலை எண் 7, திண்டுக்கல் முதல் கோவை வழியாக சாம்ராஜ் நகர் செல்லும் சாலை எண் 209, திண்டுக்கல் முதல் திருச்சி வழியாக சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 45, திண்டுக்கல் முதல் குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலை, திண்டுக்கல் முதல் காரைக்குடி செல்லும் தேசிய நெடுóஞ்சாலை எனப் பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகள் அதிகம் நிறைந்த மாவட்டமாக திண்டுக்கல் உள்ளது.

  இதனால் மாநிலத்திலேயே விபத்து அதிகம் நடைபெறும் இடங்களில் 5-ம் இடத்தையும், தென்மாவட்டங்களிலேயே முதல் இடத்தையும் திண்டுக்கல் மாவட்டம் வகித்து வருகிறது. மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏற்படும் விபத்துகளால் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.

  மாவட்டத்தில் ஒரு கிராமத்தின் ஜனத்தொகை 500 ஆகத்தான் இருக்கும். இதன்படி பார்த்தால் ஆண்டுக்கு ஒரு கிராமம் பலியாக வருவதாகக் கொள்ளலாம். இதனைக் கருத்தில் கொண்டு திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ். முத்துச்சாமி சாலை விபத்துக்களைத் தடுக்கவும், இதுதொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

  பொதுமக்களின் மனமாற்றத்தினால் மட்டுமே பெருமளவு விபத்துகளைத் தடுக்க முடியும் என்ற நோக்கில் முதல் கட்டமாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தினம் காவல் துறையினரால் கடைப்பிடிக்கப்பட்டது.

  வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு வர்ணம் பூசுதல், வாகன ஓட்டுநர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல், மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் பார்வை படும்படியான இடங்களில் சாலை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த படங்களின் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலமே பொதுமக்களிடம் மனமாற்றத்தை உருவாக்க முடியும் எனக் காவல் துறை நம்புகிறது.

  விபத்துகள் தடுக்கும் நடவடிக்கை குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ். முத்துச்சாமி கூறியதாவது:

  சாலை விபத்துகளை குறைத்து மனித உயிர்களைக் காப்பதில் மக்களோடு மக்களாக இணைந்து திண்டுக்கல் மாவட்டக் காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர். விபத்துகளில் அதிகம் உயிரிழப்பவர்கள் மிகவும் இளம் வயதினராக உள்ளனர்.

  இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது தான் ஒரு ஹீரோவாகக் கற்பனை செய்து கொண்டு சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் அலட்சியப்போக்குடனும், கவனக்குறைவு, துணிச்சலுடன் வாகனங்களை இயக்குவதே விபத்துக்குக் காரணமாக அமைகிறது.

  வாகனம் ஓட்டும்போது உயிர் மீதான பயம் அனைவருக்கும் வரவேண்டும் என்பதற்காக மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட விபத்து படத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

  2008-ம் ஆண்டு மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 391 பேர் உயிரிழந்தும், 1396 பேர் காயமடைந்தும் உள்ளனர். 2009-ம் ஆண்டு 438 பேர் உயிரிழந்தும், 1393 பேர் காயமடைந்துள்ளனர். 2010-ம் ஆண்டு ஜனவரி முதல்

ஜூன் வரை 223 பேர் உயிரிழந்தும் 834 பேர் காயமடைந்துள்ளனர். ஜூலை 15-ம் தேதி வரை விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

  விபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் கடந்த மாதத்தை விட ஜூலை மாதத்தில் ஏற்படும் உயிரிழப்பு பாதிக்குப் பாதியாக குறைந்துள்ளது என்றார்.

  சாலை விபத்துகள் குறித்து திண்டுக்கல் சரக காவல் துணைத் தலைவர் சைலேஷ் குமார் யாதவ் கூறுகையில், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காதது தான் விபத்துக்குக் காரணம். வாகன ஓட்டுநர்களில் சிலர் செய்யும் தவறுகளே விபத்தை உருவாக்குகிறது என்பதை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளி மாணவர்களிடமும் போக்குவரத்து விதிகள் குறித்து விளக்கி கூறப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

  மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள சாலை விபத்து படத்தட்டிகள் குறித்து நிலக்கோட்டையைச் சேர்ந்த லாரி டிரைவர் தங்கராஜ் கூறுகையில், விபத்துகளுக்கு பொதுவாக லாரி ஓட்டுநர்கள் வேகமாக ஓட்டுவது தான் காரணம் எனக் கூறப்படுவதுண்டு.

பொதுமக்களும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் சாலை விதிகளைக் கடைப்பிடித்தாலே பெருமளவு விபத்துக்களைத் தடுக்க முடியும். விபத்து குறித்து வைக்கப்பட்டுள்ள படத்தட்டிகளைப் பார்க்கும்போது எங்களைப் போன்ற ஓட்டுநர்களுக்கு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது என்றார்.

  மாவட்டக் காவல் துறையினரின் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு விளம்பரங்கள் மூலம் விபத்துகளைத் தவிர்க்கும் ஆர்வம், முயற்சி வெற்றியைத் தரும் என ஆட்சியர் மா.வள்ளலார் நம்பிக்கை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.