நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தாமதமாகும் 18 கோடி பாலாறு கூட்டுக் குடிநீர்த் திட்டம்

பழனி, அக். 27: திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலாறில் அமைக்கப்பட்டுவரும் கூட்டுக் குடிநீர்த் திட்டம், குடிநீர் வாரியத்தின் மந்தமான பணியால் மிகவும் தாமதம் அடைந்து வருகிறது.   பழனி, ஒட்டன்சத்திரம்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:00 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி, அக். 27: திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலாறில் அமைக்கப்பட்டுவரும் கூட்டுக் குடிநீர்த் திட்டம், குடிநீர் வாரியத்தின் மந்தமான பணியால் மிகவும் தாமதம் அடைந்து வருகிறது.

  பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் ஏராளமான ஊராட்சிகளில் குடிநீர் இன்றி  மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். பல பகுதிகளும் பருவமழையை நம்பியே விவசாயம் செய்ய வேண்டியிருப்பதால், ஆண்டில் பல மாதங்களில் நிலங்கள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன.

 நிலத்தடி நீரும் பல நூறு அடிகளுக்குக் கீழே சென்றுவிட்டதால், பல இடங்களில்  ஒரு குடம் குடிநீருக்கே மக்கள் சிரமப்பட்டனர்.

 இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் சட்டசபையில் நடைபெற்ற பட்ஜெட்  கூட்டத்தில், பழனி எம்எல்ஏ அன்பழகன் பேசுகையில், கிராம மக்கள் அனைவருக்கும் குடிநீர் தடையின்றி கிடைக்கவும், பாலாறு அணையில் இருந்து நீரைக் கொண்டு சென்று வழங்கவும் அரசு திட்டம் வகுக்க முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார்.

 இதன் அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட்டு சுமார்  18 கோடியில் பாலாறு அணையில் இருந்து கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன.

  2009 ஜனவரியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்தை பழனியில் பஸ் நிலைய விரிவாக்கத்தின்போது தொடக்கி வைத்தார். இந்தத் திட்டம் நிறைவேறும் பட்சத்தில் பழனியில் 20 ஊராட்சிகளும், தொப்பம்பட்டியில் 18 ஊராட்சிகளும் என மொத்தம் 176 கிராமங்களை சேர்ந்த 1.75 லட்சம் மக்கள் பயன் பெறுவர்.

  பல பகுதிகளிலும் நிலத்தடியில் சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட்ட நிலையில், கிராமங்களிலும் மேல்நிலைத் தொட்டிப் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன.  ஆனால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் இந்தப் பணியில் சரிவர கவனம் செலுத்தாததால், பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பல இடங்களிலும் சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்படவில்லை.

  பழனி எம்எல்ஏ அன்பழகனிடம் இதுபற்றி கேட்டபோது, இத்திட்டம் பொதுமக்களுக்காக பெரிதும் போராடி கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.  ஆனால் அரசுக்கு கெட்டபெயர் ஏற்படும் வகையில், அரசுத் துறைகள் செயல்பட்டு வருகின்றன.  செப்டம்பர் 2010-ல் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், பணிகளில் 80 சதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது.  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் பணிகளில் அக்கறையின்றி உள்ளனர்.

 இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளதாகத் தெரிவித்தார்.

 பழனி குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளர் சிங்கராஜிடம் கேட்ட போது, மாவட்ட அலுவலகத்தில் தெரிவிக்கும் பணிகளை மட்டுமே நாங்கள் செய்கிறோம்.  மேலும், தாமதத்துக்கான காரணத்தை உயர் அதிகாரிகளிடமே கேட்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

 38 ஊராட்சிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து 75 ஆயிரம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வண்ணம் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் திட்டப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.