மதுரை அமெரிக்கன் கல்லூரி பிரச்னை: கூட்டுக் குழு விசாரணைக்கு வரவேற்பு

மதுரை, ஜன. 8: மதுரை அமெரிக்கன் கல்லூரி பிரச்னை தொடர்பாக கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என கல்லூரி முன்னாள் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கூறியு
Published on
Updated on
2 min read

மதுரை, ஜன. 8: மதுரை அமெரிக்கன் கல்லூரி பிரச்னை தொடர்பாக கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது

என கல்லூரி முன்னாள் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.

    மேலும், கோரிக்கைகளை கவனமுடன் கேட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட செயல் வரவேற்புக்கும், பாராட்டுக்கும் உரியது எனப் பேராசிரியர் சாலமன் பாப்பையா கூறியுள்ளார்.

   மதுரையில் அந்தக் கல்லூரி வளாகத்தில் உள்ள முதல்வர் இல்லத்தில் கல்லூரி முன்னாள் முதல்வர் டி.சின்னராஜ் ஜோசப், கல்லூரி சுயநிதிப்பிரிவு டீன் பேராசிரியர் கே.அன்புநாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:

   அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக முதல்வர் கருணாநிதி மூவர் குழுவை அறிவித்து உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கல்லூரி நலன் கருதி

பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் சார்பில், கடந்த சில நாள்களுக்கு

முன்னர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் விடுத்திருந்த 6 கோரிக்கைகளின் அடிப்படையில் முதல்வரின் உத்தரவும் இப்போது அமைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.

   ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கல்லூரி நிர்வாகத்தை சட்டவிரோதமாகக் கைப்பற்றும் சூழ்ச்சிகள் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும்.  

கல்லூரிக்குள் அலுவலகப் பூட்டுகளை உடைத்து பணத்தையும், முக்கிய ஆவணங்களையும் திருடியதையும் வழக்காக பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.

   தமிழக முதல்வர் அறிவித்துள்ள உயர்நிலைக் குழு விசாரணை நடத்தும்போது ஆதாரங்களுடன் எங்களது புகார்கள் தொடர்பாக நிரூபிப்போம். கல்லூரி நிர்வாகச் சட்டத்துக்கு விரோதமாகச் செயல்பட்டோருக்கு உதவிய மதுரை மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநரக அதிகாரிகள், சென்னையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரக அலுவலர்கள் மீதும் ஆதாரத்துடன் புகார் அளிக்கப்படும்.

   இந்தக் கல்லூரி நிர்வாகம் தொடர்பாக பேராயர்கள் யாரும் அதிகாரம் செலுத்த

முடியாது என்பதையும் ஆதாரத்துடன் நிரூபிப்போம். ஆகவே தமிழக முதல்வர் அறிவித்த விசாரணைக் குழு விரைவில் விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றனர்.

   சாலமன் பாப்பையா: உயர்நிலைக் குழு விசாரணை குறித்து பேராசிரியர் சாலமன் பாப்பையா மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா ஆகியோர் கூறுகையில், கல்லூரிப் பிரச்னை குறித்து தமிழக முதல்வர் கவனமாகக் கேட்டதுடன், விரைந்து நடவடிக்கை எடுத்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

   மதுரையின் பாரம்பரிய அடையாளமாகத் திகழும் கல்லூரி நலனையும், அதில்

பயிலும் நாலாயிரம் மாணவ, மாணவியர் நலனையும் கருத்தில் கொண்டு முதல்வர் எடுத்த நடவடிக்கைக்கு என்றும் கடமைப்பட்டுள்ளோம் என்றனர்.

  குழுவுக்கு வரவேற்பு: பேராயர் தரப்பில், கல்லூரியின் முதல்வராகக் கூறப்படும், கல்லூரிக் கல்வி இயக்குநரக ஆக்டிங் முதல்வர், செயலராக ஒப்புதல் அளித்ததாகக்

கூறப்பட்டு வரும் பேராசிரியர் ஆர்.மோகன் தரப்பில், பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பிய செய்திக்குறிப்பில், தமிழக அரசின் தலைமைச் செயலர் தலைமையில் அமைதிக் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.