/

அரசு மருத்துவமனையில் சமுதாய சமையலகம் மீண்டும் செயல்படுமா?

திண்டுக்கல், ஜூலை 15: திண்டுக்கல் அரசு பொது மருத்துவமனையில் எரிவாயு அடுப்பு,  சமையல் பாத்திரங்களுடன் ஒரு மணி நேரத்துக்கு பயன்படுத்திக் கொள்ள ரூ. 3  வாடகை என்ற வசதிகளுடன் கூடிய சமுதாய சமையலகத் திட்டம்

Updated On :19 செப்டம்பர் 2012, 9:36 pm

திண்டுக்கல், ஜூலை 15: திண்டுக்கல் அரசு பொது மருத்துவமனையில் எரிவாயு அடுப்பு,  சமையல் பாத்திரங்களுடன் ஒரு மணி நேரத்துக்கு பயன்படுத்திக் கொள்ள ரூ. 3  வாடகை என்ற வசதிகளுடன் கூடிய சமுதாய சமையலகத் திட்டம் தற்போது முடங்கி உள்ளது.

 இத்திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படுமா என்பது, மருத்துவமனை உள்நோயாளிகள், அவர்களுக்குத் துணையாக உள்ளவர்களின்  கேள்வியாக உள்ளது.

 மத்திய அரசு எரிவாயு நிறுவனங்களின் மூலம் 2010-ல் கிராமங்களில் சமுதாயக் கூடம், எரிவாயு சமையலகம் அமைக்கப்படும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

 இதன்படி, கிராமங்களில் உள்ள சமுதாயக் கூடத்தில் எரிவாயு நிறுவனங்கள்  எரிவாயுவுடன் கூடிய அடுப்பு, சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை இலவசமாக வழங்கியது. ஒரு மணி நேரத்திற்கு இந்த சமையல் கூடத்தை கிராமத்தினர் பயன்படுத்திக் கொள்ள, சிறிய தொகையை கட்டணமாகப் பெற்றுக் கொள்வது  என்பது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

 இந்நிலையில், தமிழகத்தில் இலவச எரிவாயு மற்றும் அடுப்புகள் விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதனால், கிராமங்களில் சமுதாயக் கூடம்  சமையலகம் எனும் திட்டத்தை செயல்படுத்த அவசியமில்லாமல் போனது.

 எனவே, இத்திட்டத்தை அரசு பொது மருத்துவமனையில் செயல்படுத்தும் நோக்கில், திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சமையல் கூடம் ஏற்படுத்தப்பட்டது.

 கடந்த 18.8.2010-ல் ஆட்சியரால் இத்திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.

 உள்நோயாளிகளுக்குத் தேவையான சுடு தண்ணீர், பால் மற்றும் சுகாதாரமான  உணவினை தயாரிக்க அவர்களது உறவினர்கள் சமையலகத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ஒரே சமயத்தில் 4 பேர் சமையல் செய்யும் வகையில் வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன.

 ஒரு மணி நேரத்திற்கு இந்த கூடத்தில் உள்ள எரிவாயுவை பயன்படுத்திக் கொள்ள  ஒரு நபருக்கு ரூ. 3 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

 இத்திட்டம், அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழைகளுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

 எரிவாயுவினை பெட்ரோலிய நிறுவனமும், விநியோகஸ்தரும் தொடர்ந்து குறைந்த கட்டணத்தில் வழங்கத் தயாராக இருந்துவரும் நிலையில், இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்படாமல் முடக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, 24 மணி நேரமும் செயல்படும் இந்த சமுதாய சமையல் கூடத்தை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து கட்டணத்தை வசூல் செய்யவும், மேற்பார்வையிடுவதற்கும் ஆள்கள் இல்லை.

திட்டம் தொடங்கப்பட்ட போது, ஆட்சியராக இருந்த மா.வள்ளலார் கூடத்தைப் பராமரிக்க, அதன் பொறுப்பை மாற்றுத் திறனாளிகளிடம் விடவேண்டும் என அறிவுறுத்தினார்.

 ஓரிரு மாதங்கள் மட்டுமே இதனைச் செயல்படுத்த முடிந்தது.

 மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் சமையல் கூடத்தை பராமரிக்கலாம் என்றால், சுயஉதவிக் குழுவினர் உணவுப் பொருள்களை தாங்களே தயாரித்து குறைந்த விலைக்கு விற்பதாக இருக்கும்பட்சத்தில் கூடத்தை ஏற்றுக் கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

 சேவை நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில், வணிகத்தைப் புகுத்த முடியாது.

 இருந்தபோதிலும், மருத்துவமனை ஊழியர்களைக் கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்த முடியுமா என யோசித்து வருகிறோம் என்றனர்.

 தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத ஏழைகள், அரசு பொது மருத்துவமனையை நாடுகின்றனர்.

 இந்நிலையில், தினசரி உணவுக்காக நோயாளிகள் ஹோட்டல்களில் பெரும்  தொகையை செலவழிப்பதைத் தவிர்க்கும் நோக்கில், இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

 ஆகவே, இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.