விருதுநகர், ஜூலை 27: விருதுநகர் மாவட்டத்தில், பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சமத்துவபுரங்கள் அவசரமாகத் திறக்கப்பட்டும், இதுவரை பயனாளிகள் தேர்வு செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இதனால், அங்குள்ள வீடுகள் பராமரிப்பின்றி சேதமடையும் நிலை உள்ளது.
இம்மாவட்டத்தில், ஏற்கெனவே 9 சமத்துவபுரங்கள் உள்ளன.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூனில் மேலும் இரு இடங்களில் சமத்துவபுரங்களை அமைக்க அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து, வத்ராப் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மூவரைவென்றான் கிராமத்திலும், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில், செட்டிக்குறிச்சி ஊராட்சியைச் சேர்ந்த அருணாசலபுரம் கிராமத்திலும், தலா ரூ. 2.69 கோடி செலவில் சமத்துவபுரம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றன.
இந்நிலையில், பணிகள் நிறைவடையாத நிலையில், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டன.
சமத்துவபுரத்தில் சாலைப் பணிகள், கழிவுநீர் வாய்க்கால்கள், பாலங்கள். சமுதாயக் கூடம், மேல்நிலை குடிநீர்த் தொட்டி கட்டும் வேலைகள் தொடங்கப்பட்டு, நிறைவேற்றப்படாமல் உள்ளன.
திறக்கப்பட்டு 5 மாதங்கள் ஆன பின்னரும், இரு சமத்துவபுரங்களுக்கும் பயனாளிகள் தேர்வு செய்யப்படவில்லை.
சமத்துவபுரத்தில் உள்ள 100 வீடுகளுக்கு, இட ஒதுக்கீடு அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்-40 வீடுகள், பிற்படுத்தப்பட்டோர்-25, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்-25, இதர சமுதாயத்தினர்-10 என்ற அடிப்படையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
சமத்துவபுர வீடுகளில் பயனாளிகள் குடியேறாமல் இருப்பதால், அவை பராமரிப்பு இன்றி விரைவில் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மூவரைவென்றான் ஊராட்சித் தலைவர் கோமதி கூறுகையில், இங்கு அமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகளான சாலைப் பணிகள், குடிநீர்த் தொட்டி, ஓடைகளின் இடையே பாலம், கழிவுநீர் வாய்க்கால் ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெறாமல் உள்ளன.
இங்கு இரு தெருக்கள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன.
சமத்துவபுரத்தில் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கான தொகை கிடைக்கப் பெறவில்லை.
அங்கு பணிகளை நிறைவேற்றுவதற்கான திட்டச் செலவு ரூ. 60 லட்சம் இதுவரை வரவில்லை.
சமத்துவபுரம் திறக்கப்பட்ட பின், பலமுறை சென்னை சென்று அரசிடம் முறையிட்டும் பயனில்லை.
மேலும் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சித் தலைவர், பெண் ஊக்குநர் ஆகியோர் கொண்ட குழுவினர் தேர்வு செய்த பயனாளிகள் பட்டியலை, கிராமசபையில் வைத்து ஒப்புதல் பெற்று மாவட்ட ஆட்சியர், திட்ட இயக்குநரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரையில் பயனாளிகளுக்கு சமத்துவபுரத்தில் வீடுகளை ஒதுக்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் தங்களுக்கு வீடு கிடைக்குமா, கிடைக்காதா என்ற வருத்தத்தில் பயனாளிகள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், சமத்துவபுரத்தில் அடிப்படை வசதி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு, அரசிடம் இருந்து நிதி வரவில்லை.
அதனால் பணிகள் நிறைவடையாமல் உள்ளன.
மேலும், அரசின் அனுமதி இல்லாததால் சமத்துவபுரத்தில் பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்யும் பணி தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.