முதல்வர் அறிவித்த "மதுரை மீட்பு' திட்டம் தொடக்கம்!

மதுரை, ஜூன் 2: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, அதிமுக பொதுச் செயலரான முதல்வர் ஜெயலலிதா அறிவித்த "மதுரை மீட்பு' திட்டம் இப்போது தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  மாநிலத்தில் உள்ள 30 மாவட்ட ஆட
Updated on
2 min read

மதுரை, ஜூன் 2: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, அதிமுக பொதுச் செயலரான முதல்வர் ஜெயலலிதா அறிவித்த "மதுரை மீட்பு' திட்டம் இப்போது தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

 மாநிலத்தில் உள்ள 30 மாவட்ட ஆட்சியர்களும், பெரும்பாலான காவல்துறை உயர் அதிகாரிகளும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், நேர்மைக்கும் அதிரடி நடவடிக்கைகளுக்கும் பெயர்பெற்ற மதுரை மாநகர காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர், புறநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகிய மூவரும் மாற்றப்படாதது "மதுரை மீட்பு' திட்டத்தின் முதல் நடவடிக்கை என அதிகாரிகள் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

 திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மகனான மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் தலைமையிடம் மதுரை. இங்கு அமைச்சர் அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர்கள் சுமார் 15 பேர் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக ஏராளமான புகார்கள் கூறப்பட்டுவந்தன. மதுரையில் அழகிரியின் அனுமதி இல்லாமல் எதுவும் நடைபெறாது என்பதே நிலை என எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். அரசு அதிகாரிகளும் சுயமாகச் செயல்பட முடியாத நிலை இருந்தது.

 சட்டப்பேரவைத் தேர்தல் முன்னோட்டமாக மதுரைக்கு கடந்த அக்டோபரில் வந்த ஜெயலலிதா, இங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது, அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவர்கள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் அழகிரியிடமிருந்து மதுரை மீட்கப்படும் என்றும் அறிவித்தார். அது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

 தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ள சூழ்நிலையில், "மதுரை மீட்பு' திட்டம் இப்போது தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

 ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு முதலாவதாக, காவல் துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அடுத்து இப்போது மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், மதுரை மாநகர காவல் துறை ஆணையரான கண்ணப்பன், மாவட்ட ஆட்சியர் உ. சகாயம், புறநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை.

 அஸ்ரா கர்க், முதலில் பணியிட மாற்றம் செய்யப்பட்டாலும், அடுத்த நாளே அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

 மாநகர காவல் துறை ஆணையரான கண்ணப்பன், நேர்மைக்கும், கடமைக்கும் பெயர் பெற்றவர். அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாதவர். சி.பி.ஐ.யில் எஸ்.பி.யாகப் பணியாற்றியவர். மாவட்ட ஆட்சியர் சகாயம், நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, தனது சொத்துக் கணக்கை பகிரங்கமாக அறிவித்து, நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தவர். நேர்மையானவர் எனப் பெயரெடுத்தவர். அதிரடி நடவடிக்கையாளர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான அஸ்ரா கர்க், சாதி மோதல்களுக்கும், அரசியல் அதிகார மையங்களின் போட்டிக்கும் பெயர் பெற்ற திருநெல்வேலியில் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல், நேர்மையாகச் செயல்பட்டவர்.

 சட்டப்பேரவைத் தேர்தலின்போது "திருமங்கலம் பார்முலா' (வாக்குக்குப் பணம்) அமோகமாக அமல்படுத்தப்படலாம் என்றும், அதன் ஆரம்பம் மதுரையாக இருக்கலாம் என்றும் கருதிய தேர்தல் ஆணையம் மதுரை மீது இரண்டு கண்களையும் வைத்து கண்காணித்தது. அதற்காக இங்கு அப்போது இருந்த மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் துறை ஆணையர், எஸ்.பி. ஆகியோரை மாற்றிவிட்டு, அந்த மூன்று இடங்களுக்கும் முறையே சகாயம், கண்ணப்பன், அஸ்ரா கர்க் ஆகிய 3 பேரும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் மூவரும் அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொடுத்த அழுத்தங்களுக்கு அசைந்து கொடுக்காமல் பணியாற்றினர். தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்தது.

 தேர்தல் முடிந்து அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் இந்த மூன்று அதிகாரிகளுமே வழக்கம்போல் தங்களின் அடுத்த பணியிட மாறுதலுக்கு தயாராகவே இருந்தனர். தங்களின் விருப்பங்களையும் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனால், அவர்களைப் பணியிட மாறுதல் செய்யும் மனநிலையில அரசு இல்லை என்பது இப்போது தெளிவாகிவிட்டது. ஆதலால், இப்போது மாவட்ட ஆட்சியரும், மாவட்ட எஸ்.பி.யும் தங்களின் பணிகளைத் தொடங்கி விட்டனர். மாநகர காவல் துறை ஆணையர் மட்டும் ஹைதராபாத்தில் பயிற்சியில் இருக்கிறார். ஜூலை 2-வது வாரத்தில் பணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 முதல்வர் ஜெயலிலதா அறிவித்திருந்த "மதுரை மீட்பு' திட்டத்தைச் செயல்படுத்த இந்த அதிகாரிகளே சரியான நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அமைச்சர் அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது அது "அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை' என்ற அவப்பெயர் வரக் கூடாது என்பதிலும் அதிமுக அரசு கவனமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

 ஆட்சி மாற்றத்துக்குப் பின்பு நியமிக்கப்பட்ட அதிகாரிகளைக் கொண்டு எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுத்தால், அரசுக்கு விசுவாசத்தைக் காட்டுவதற்காக அதிகாரிகள் பாரபட்சத்துடன் செயல்படுவதாக ஏதேனும் ஒருதரப்பில் இருந்து ஆட்சி மீதும், அதிகாரிகள் மீதும் குறை கூறப்படலாம். ஆனால், இப்போதுள்ள இந்த மூன்று அதிகாரிகளும் எவ்வித அரசியல் சார்பு இல்லாமலும், அவர்களது நேர்மை மற்றும் பணித்திறனை மட்டுமே கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையத்தால் பணி நியமனம் பெற்றவர்கள் ஆவர்.

 அவர்கள் மூலம் நடவடிக்கை எடுப்பது புகார்களுக்கு இடமளிக்காது என அரசு தரப்பில் கருதப்படுவதாகக் கூறப்படுகிறது.

 மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தி.மு.க.வினர் மீது ஏராளமான புகார்கள் உள்ளன. நில அபகரிப்பு, ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, கொலை முயற்சி, கனிம வளங்களைக் கொள்ளையடித்தல் என புகார்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது காவல் ஆணையர், ஆட்சியர், எஸ்.பி. ஆகியோருக்கு பணியிட மாறுதல் இல்லை என ஆகிவிட்டதால், அவர்கள் இனிமேல் "பணிகளை'த் தொடங்கி விடுவார்கள் என்பது அதிகாரிகள் வட்டாரத்தின் கருத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com