முழுமை பெறாத அரசு வீடுகள்: அவதியில் பழனி மலைவாழ் மக்கள்
பழனி நவ.4: பழனியை அடுத்த ஆண்டிபட்டி அருகே மண்திட்டு பகுதியில் அரசு திட்டம் மூலம் கட்டப்படும் வீடுகள் பாதியில் நிற்பதால், மலைவாழ் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பழனியை அடுத்த ஆண்டிபட்


பழனி நவ.4: பழனியை அடுத்த ஆண்டிபட்டி அருகே மண்திட்டு பகுதியில் அரசு திட்டம் மூலம் கட்டப்படும் வீடுகள் பாதியில் நிற்பதால், மலைவாழ் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
பழனியை அடுத்த ஆண்டிபட்டி மலைப்பகுதியில் யானைகள், மான்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல விலங்குகள் ஏராளமாக உள்ளன. இந்த மலைப்பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன் மலைவாழ்மக்கள் குகைகளில் வசித்து வந்தனர். ஆதிவாசியான இவர்களை வனத்துறையினர் கடும் முயற்சிக்குப் பின் தரைத்தளத்திற்கு வாழ்வதற்கான வசதிகள் செய்து தருவதாக அழைத்து வந்தனர்.
ஆண்டிபட்டியை அடுத்த மண்திட்டு என்ற இடத்தில் அவர்களுக்கு நல்ல திடமான குடிசைகள் அமைத்தும், அந்த இடங்களுக்கு பட்டாவும் வனத்துறையினர் பெற்றுத் தந்தனர். மேலும், மலைவாழ் மக்களின் குழந்தைகள் கல்விக்காக உணவு, உறைவிடப் பள்ளியும், நிதி நிலைமை முன்னேற ஆட்டுக் குட்டிகளையும் வனத்துறை பெற்றுத் தந்தது.
மேலும் அவர்களுக்கு ரேசன் கார்டுகள், மலைப்பகுதியில் தேன் மற்றும் சீமார் சேகரிக்கவும் வனத்துறை அனுமதி பெற்றுத் தந்தது. மலைவாழ் மக்களுக்காக வந்த வனத்துறை பெரும் பாடுபட்டு வந்த நிலையில் மாவட்ட வருவாய்த் துறை அவர்களுக்கு இந்திரா காந்தி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி தருவதாக தெரிவித்தது.
இதற்கான கணக்கெடுப்புக்கு வந்த அதிகாரிகள் வீடு கட்டி தருவதாக கூறி அவர்கள் கட்டி இருந்த தரமான குடிசைகளை அப்புறப்படுத்துமாறு தெரிவித்தது. இதை நம்பி அவர்கள் கடந்த 2009ம் ஆண்டு குடிசைகளை பிரித்து தற்காலிகக் குடிசைக்கு சென்றனர்.
ஆனால் இன்று வரை வட்டார வளர்ச்சி நிர்வாகம் அவர்களுக்கு வீடுகளை அஸ்திவாரத்தோடு கட்டிவிட்டு பாதியில் விட்டு விட்டது.
இரண்டு ஆண்டுகளாக மழை, வெயிலில் மலைவாழ் மக்கள் பெரும் துன்பப்பட்டு வருகின்றனர்.
வனத்துறை நிர்வாகம், மாவட்ட ஆட்சியருக்கு இதுகுறித்து தெரிவித்த போது, தற்போதைய அதிமுக அரசின் பசுமை வீடுகள் திட்டத்தில் இதை சேர்க்கலாம் என அறிவுரை மட்டும் தெரிவித்துள்ளது.
ஆனால் கடந்த ஆட்சியில் இதற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு, மலைவாழ் மக்கள் பெயரில் ஏதும் வங்கியில் கடன் பெறப்பட்டுள்ளதா என்பது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவிக்க மறுத்து வருகின்றனர். கடந்த பல நாட்களாக பெய்து வரும் புயல் மழையில் குழந்தைகளுடன் மலைவாழ் மக்கள் ஆட்டு மந்தை போல குவியலாக அங்குள்ள ஒரு கட்டிடத்தில் ஒண்டி வாழ்கின்றனர்.
இதுகுறித்து பழனி வனத்துறை ரேஞ்சர் தர்மராஜ் கூறும்போது, மலையில் வசித்து வந்த மக்கள் சமதளத்துக்கு அழைத்து வந்து அவர்களை சிரமப்பட வைத்துள்ளது பெரும் வருத்தத்தை தருகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
நிதி பற்றாக்குறை என்றால் வனக்குழுவில் இருந்து கூட நிதி பெற்று தருகிறோம் என தெரிவித்தும் பாராமுகமாக அதிகாரிகள் உள்ளனர் என தெரிவித்தார்.
இதுகுறித்து மலைவாழ் மக்கள் தெரிவித்தபோது, மலையில் குகைகளில் கூட நிம்மதியாக நாங்கள் வாழ்ந்து வந்தோம்.
ஆனால் அரசாங்கம் எங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தருவதாக கூறி கீழே அழைத்து வந்து தற்போது தவிக்க விட்டு விட்டது. குழந்தைகளுடன் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் அச்சத்தோடு வாழ்ந்து வருகிறோம் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
தற்போது ஐந்து வீடுகள் லிண்டல் மட்டமும், மற்ற 11 வீடுகள் அஸ்திவாரம் கட்டப்பட்டதோடும் உள்ள நிலையில், தமிழக அரசு இந்த மலைவாழ் மக்களை கண் திறந்து பார்க்காவிட்டால் அவர்கள் வாழ்க்கை மீண்டும் மலைக்கே ஏறிவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...