தேனி, பிப். 10: தேனியில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடங்களில் தார் சாலைகள் அமைப்பதற்கு அரசு ரூ.6.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தேனி நகராட்சிப் பகுதியில் ரூ.42 கோடி மதிப்பில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தில் கழிவு நீர் குழாய்கள் பதிக்கப்பட்ட இடங்களில் தார் சாலைகளை சீரமைப்பதற்கு முதல் கட்டமாக அரசு ரூ.3.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதி மூலம் என்.ஆர்.டி.நகர், அரசு மருத்துவமனை சாலை, அல்லிநகரம் மேல்நிலைப் பள்ளித்தெரு, வள்ளிநகர், பள்ளி ஓடைத்தெரு ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடங்களில் தார் சாலைகளை சீரமைப்பதற்காக 2-ம் கட்டமாக அரசு ரூ.2.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இந்த நிதியில் இருந்து காமராஜர் சாலை, கே.ஆர்.ஆர்.நகர், ஜவஹர்தெரு உள்ளிட்ட இடங்களில் விரைவில் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் நகர்மன்றத் தலைவர் எஸ்.முருகேசன் கூறினார்.