பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் ஊழியர் காலிபணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுமா?

விருதுநகர், மே 8: விருதுநகர் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் விடுதிகளில் ஊழியர்கள் காலிப்பணியிடங்கலை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Updated on
2 min read

விருதுநகர், மே 8: விருதுநகர் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் விடுதிகளில் ஊழியர்கள் காலிப்பணியிடங்கலை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பணிப்பளு அதிகரித்துள்ள நிலையில், பணியாளர்கள் வி.ஆர்.எஸ். வாங்கிச் செல்வதாலும், மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் 19 மாணவிகள் விடுதிகளும், 28 மாணவர்கள் விடுதிகளும் என மொத்தம் 47 விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கல்லூரி, மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சுமார் 2 ஆயிரம் தங்கிப் படிக்கின்றனர்.

இந்த விடுதிகளில் காப்பாளர், அலுவலக உதவியாளர்கள், சமையலர்கள், பாதுகாவலர்கள் என மொத்தம் 168 பேர் உள்ளனர். இப்பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட விடுதிகளில் தற்போது போதுமான ஊழியர்கள் இல்லை. காலியாக உள்ள விடுதிக் காப்பாளர்கள்-12, சமையலர்கள்-41, காவலர்கள்-28, அலுவலக உதவியாளர்கள்-2 என 83 பணியிடங்கள் காலியாக உள்ளன.

விருதுநகர் கல்லூரி விடுதி, அருப்புக்கோட்டை கல்லூரி விடுதி, மலைபட்டி, முஷ்டக்குறிச்சி, திருச்சுழி, கட்டாங்குடி, நரிக்குடி, முத்துராமலிங்காபுரம், புதுப்பட்டி உள்பட 20-க்கும் மேற்பட்ட விடுதிகளில் போதிய பணியாளர்கள் இல்லாத நிலையில் செயல்படுகின்றன. அரசு விதிமுறைப்படி 50 மாணவர்கள் தங்கிப் படிக்கும் ஒரு விடுதியில் காப்பாளர்-1, சமையலர்-2, காவலர்-1 எனப் பணியாளர்கள் இருக்க வேண்டும். இந்த விடுதிகளில் போதுமான ஊழியர்கள் இல்லாத நிலையில் குறிப்பிட்ட நேரத்துக்கு மாணவ, மாணவிகளுக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.

மேலும், குறிப்பிட்ட விடுதியில் 2 சமையலர் இருக்க வேண்டிய நிலையில் ஒருவர் மாற்றுப்பணிக்கு அடுத்த விடுதிக்கு சென்று விடுகின்றனர். இதனால், உடல் நலக்குறைவு காரணமாக விடுப்பு எடுக்க முடியாத நிலை உள்ளது. அப்பணியாளர் விடுப்பில் சென்றாலும் வெளியில் இருந்து ஆள்களை அழைத்து வந்த பின்னர்தான் செல்ல வேண்டியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் சமையலர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு விடுதியிலும் காப்பாளர்கள் இல்லாத நிலையில் மாணவர்களின் வருகைப்பதிவேடு, கல்வித்தரம், அவர்களின் நடத்தை ஆகியவற்றை அறிய முடியாத நிலை உள்ளது. குறிப்பாக மதிப்பெண் பட்டியலை ஆய்வு செய்து மேலொப்பம் இடமுடியாத நிலை உள்ளது. அதோடு, ஒவ்வொரு விடுதிக் காப்பாளரும் கூடுதல் பொறுப்பாகவும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிப் பணியாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி கூறியதாவது:

இது குறித்து முதல்வருக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், விடுதிப் பணியாளர்கள் கூடுதல் பொறுப்பு வகிக்க வேண்டியிருக்கிறது.

ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாத நிலையில் இதுவரை சமையலர்கள் 9 பேர் வி.ஆர்.எஸ். பெற்றுச் சென்றுள்ளனர். மேலும், கூடுதல் பொறுப்பால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே மாணவ, மாணவிகளின் நலனைக் கருதி உடனே பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com