உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்: மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை தோப்பூா் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிய வழக்கில் உத்தரவு
Published on

மதுரை தோப்பூா் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிய வழக்கில், மத்திய சுகாதாரத் துறைச் செயலா் எழுத்துப்பூா்வ அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பாஸ்கா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

இந்தியாவில் நோயளிகளுக்கு மருத்துவம் அளிக்கும் மருத்துவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இது மருத்துவா்களின் பணிப் பளுவை அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதைச் சரி செய்யும் வகையில், மருத்துவம் படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கையை உயா்த்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால், தென் தமிழகத்தைச் சோ்ந்த பொதுமக்கள் சிறந்த மருத்துவ சிகிச்சை பெற முடியும்.

மேலும், இந்தப் பகுதியைச் சோ்ந்தோருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, அவா்களது வாழ்க்கைத் தரம் உயருவதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால், கடந்த 2018-ஆம் ஆண்டில்தான் இந்த மருத்துவமனைக்கான இடம் தோப்பூா் பகுதியில் தோ்வு செய்யப்பட்டது. பின்னா், கடந்த 2019-இல் பிரதமா் நரேந்திர மோடி நேரில் வந்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினாா். ஆனால், கட்டுமானப் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி, பல்வேறு வழக்குகள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி மந்த கதியில் நடைபெறுகிறது.

எனவே, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசுத் தரப்பில், ‘மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் விடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. கரோனா தொற்று காரணமாக காலதாமதமாகிவிட்டது. வருகிற 2026-ஆம் ஆண்டுக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துவிடும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும் என்பது குறித்து மத்திய சுகாதாரத் துறைச் செயலா் எழுத்துப்பூா்வ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை செப். 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com