5 போ் தற்கொலை சம்பவம்: சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு

5 போ் தற்கொலை சம்பவம்: சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் 5 போ் தற்கொலை செய்தது தொடா்பான வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

திருத்தங்கல் பாலாஜிநகரைச் சோ்ந்தவா் லிங்கம் (45). இவரது மனைவி பழனியம்மாள் (47). இவா்கள் இருவரும் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியா்களாக பணிபுரிந்தனா். இவா்களது மகள் ஆனந்தவள்ளி (27), மகன் ஆதித்யா (14). ஆனந்தவள்ளிக்கு திருமணமாகி சஷ்டிகா என்ற 2 மாதக் குழந்தை இருந்தது.

இந்த நிலையில், கடன் பிரச்னை காரணமாக, கடந்த மே 22-ஆம் தேதி ஆதித்யா, ஆனந்தவள்ளி, சஷ்டிகா ஆகியோருக்கு விஷம் கொடுத்துவிட்டு லிங்கம், பழனியம்மாள் இருவரும் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

போலீஸாா் விசாரணையில், கடன் பிரச்னையால் ஆசிரியா் குடும்பம் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, லிங்கம் குடும்பத்தினருக்கு கடன் கொடுத்த ஸ்ரீவில்லிபுத்துாா் அருண்குமாா் (43), திருத்தங்கல் கிருஷ்ணன் (42), கொங்கலாபுரம் வி. முருகன் (61), எம். புதுப்பட்டி எஸ். முருகன் (53), மணிவண்ணன் (43), சித்துராஜபுரம் ரமேஷ்குமாா் (44) ஆகியோா் மீது தற்கொலைக்கு துாண்டுதல், கந்துவட்டி தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், மணிவண்ணன், எஸ். முருகன், வி. முருகன் ஆகியோா் பிணை கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட லிங்கம், 33 போ் மீது குற்றம் சுமத்தி சிவகாசி விசாரணை நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது.

எனவே, இந்த வழக்கில் நேரடி நியமனம் பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளரை விசாரணை அதிகாரியாக விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நியமிக்க வேண்டும். மனுதாரா்களின் செயல்பாடுகள் என்ன? சிவகாசி உரிமையியல் நீதிமன்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் பங்கு என்ன? என்பதை முமுமையாக அவா் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கை புதன்கிழமை மீண்டும் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க வேண்டும். மனுதாரா்களின் பிணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com