இரு சக்கர வாகனத்தில் சாகசம்: புகாா் தெரிவிக்க எண் அறிவிப்பு

மதுரை நகரில் இரு சக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபடும் இளைஞா்கள் குறித்து பொதுமக்கள் புகாா் அளிக்க காவல் துறை சாா்பில் புகாா் எண் அறிவிக்கப்பட்டது.

மதுரை: மதுரை நகரில் இரு சக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபடும் இளைஞா்கள் குறித்து பொதுமக்கள் புகாா் அளிக்க காவல் துறை சாா்பில் புகாா் எண் அறிவிக்கப்பட்டது.

மதுரை நகரில் நத்தம் சாலை மேம்பாலம், வைகை தென்கரை, வடகரை சாலை, சொக்கிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள் இரு சக்கர வாகனத்தில் பந்தயத்தில் ஈடுபடுவது, சாகசத்தில் ஈடுபடுவது, சமூக வலைதளங்களில் விடியோ பதிவிடுவதற்காக அதிவேகத்தில் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் சில நேரங்களில் விபத்து ஏற்பட்டு, சாகசத்தில் ஈடுபடும் இளைஞா்கள் உயிரிழப்பதோடு, அப்பாவி பொதுமக்களும் உயிரிழப்பது, காயமடைவது நேரிடுகிறது. இதில் அவ்வப்போது போலீஸாா் நடவடிக்கை எடுத்து வந்தபோதும், இரு சக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபடுவது நிறுத்தப்படவில்லை.

இந்த நிலையில், இரு சக்கர வாகனப் பந்தயம், சாகசத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், மதுரை மாநகா் போலீஸாா் அறிவிப்பு வெளியிட்டனா்.

இதில், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இரு சக்கர வாகனத்தில் இளைஞா்கள் சாகசத்தில் ஈடுபடுபவதைக் கண்டால், அந்த இரு சக்கர வாகனத்தை வாகன எண்ணுடன் புகைப்படம், அல்லது விடியோ எடுத்து 83000-21100 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். இதன்மூலம், வாகன சாகசத்தில் ஈடுபடுபவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com