கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி பைக், கைப்பேசி பறிப்பு

சிலைமான் அருகே கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி, இரு சக்கர வாகனம், கைப்பேசிகளை பறித்துச் சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை: சிலைமான் அருகே கல்லூரி மாணவரை கத்தியால் குத்தி, இரு சக்கர வாகனம், கைப்பேசிகளை பறித்துச் சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை அருகே உள்ள சிலைமான் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மகேந்திரன் மகன் தெய்வேந்திரன் (21). இவா் மதுரையில் உள்ள கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறாா்.

இவா் திங்கள்கிழமை மாலை கல்லூரி முடிந்து தனது நண்பா் கோகுல கண்ணனுடன் மதுரை-ராமேசுவரம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். சிலைமான் அருகே சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூவா், தெய்வேந்திரனின் வாகனத்தை வழிமறித்து நிறுத்தி, அவரை கத்தியால் குத்தினா். மேலும், அவரது இரு சக்கர வாகனம், இரு கைப்பேசிகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதில் தெய்வேந்திரன் காயமடைந்தாா்.

இதுகுறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தப்பிச்சென்ற மூவரையும் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com