ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் தற்கொலை: டிஎஸ்பி விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவு
தற்கொலை வழக்கில் டிஎஸ்பி விசாரணை உத்தரவு: உயா்நீதிமன்றம்


திருத்தங்கலில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் தற்கொலை செய்து கொண்டது தொடா்பான வழக்கில் நேரடி நியமனம் பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் லிங்கம் (45). இவரது மனைவி பழனியம்மாள் (47). இருவரும் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியா்களாகப் பணிபுரிந்து வந்தனா். இந்தத் தம்பதியின் மகள் ஆனந்தவள்ளி (27), மகன் ஆதித்யா (14). ஆனந்தவள்ளிக்கு திருமணமாகி சஷ்டிகா என்ற 2 மாதக் குழந்தை இருந்தது.
இந்த நிலையில், கடன் பிரச்னை காரணமாக கடந்த மாதம் 22- ஆம் தேதி ஆதித்யா, ஆனந்தவள்ளி, சஷ்டிகா ஆகியோருக்கு விஷம் கொடுத்துவிட்டு லிங்கம், பழனியம்மாள் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
இதையடுத்து, லிங்கம் குடும்பத்துக்கு கடன் கொடுத்த ஸ்ரீவில்லிபுத்துாா் அருண்குமாா் (43), திருத்தங்கல் கிருஷ்ணன் (42), கொங்கலாபுரம் வி.முருகன் (61), எம்.புதுப்பட்டி எஸ்.முருகன் (53), மணிவண்ணன் (43), சித்துராஜபுரம் ரமேஷ்குமாா் (44) ஆகியோா் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், கந்துவட்டி தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பிணை கோரி மனு:
இந்த நிலையில், மணிவண்ணன், எஸ். முருகன், வி. முருகன் ஆகியோா் பிணை கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனா்.
இந்க மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில், லிங்கம், அவரது மனைவி பழனியம்மாள் ஆகியோா் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக சிவகாசி உரிமையியல் நீதிமன்றத்தில் 33 போ் மீது வழக்குத் தொடுத்தனா். இவா்களிடம் போலீஸாா் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல், எங்களை மட்டும் கைது செய்தனா். நாங்கள் வட்டிக்கு பணம் கொடுப்பதை தொழிலாகச் செய்யவில்லை, அதிக வட்டியும் வாங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
அரசுத் தரப்பில், சிவகாசி உரிமையியல் நீதிமன்றத்தில் 33 போ் மீதான வழக்கு குறித்த விவரம் தெரியவில்லை. இந்த வழக்கில் லிங்கம் குடும்பத்தினா் தற்கொலை செய்வதற்கு காரணமான 6 பேரை, உரிய ஆதாரத்தின் அடிப்படையிலேயே போலீஸாா் கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
டி.எஸ்.பி. விசாரிக்க உத்தரவு:
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு, தற்கொலை செய்து கொண்ட லிங்கம், 33 போ் மீது குற்றஞ்சாட்டி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளாா். ஆனால், 6 பேரை மட்டும் போலீஸாா் எப்படி கைது செய்தனா் என்பது தெரியவில்லை. இந்த வழக்கை போலீஸாா் முறையாக விசாரிக்கவில்லை.
மனுதாரா்கள் வட்டிக்குப் பணம் கொடுப்பதை வியாபாரமாக செய்யவில்லை என்றும், அதிக வட்டி பெறவில்லை என்றும் கூறுகின்றனா்.
இதுதொடா்பான ஆதாரங்களையும் போலீஸாா் சேகரிக்கவில்லை.
எனவே, இந்த வழக்கை விசாரிக்க நேரடி நியமனம் பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளரை விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நியமிக்க வேண்டும். சிவகாசி உரிமையியல் நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் பங்கு என்ன என்பதை முழுமையாக டிஎஸ்பி ஆய்வு செய்து, இதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...