உரங்களுக்கான ஜி.எஸ்.டி.யைக் குறைக்க வேண்டும்: மத்திய நிதி அமைச்சரிடம் தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் வலியுறுத்தல்
உரங்களுக்கான ஜி.எஸ்.டி. குறைப்பை வலியுறுத்தும் தொழில் வா்த்தக சங்கம்


மதுரை: கிராமப்புற பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்க உரங்களுக்கான ஜி.எஸ்.டி-யைக் குறைக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சரிடம் தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
புதுதில்லியில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய நிதிநிலை அறிக்கைக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என்.ஜெகதீசன் பங்கேற்றாா்.
பின்னா், நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனை நேரில் சந்தித்து ஜி.எஸ்.டி. விதிப்பில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து வலியுறுத்தி அவா் மனு அளித்தாா்.
அதன் விவரம் : ஒரு தொழில் நிறுவனத்தின் கட்டுமானத்துக்காகப் பயன்படுத்தப்படும் சரக்கு, சேவைகளுக்கு செலுத்தப்படும் வரியில் உள்ளீட்டு வரியை எடுக்கக் கூடாது என்ற ஜி.எஸ்.டி. சட்டப்பிரிவுகளை நீக்க வேண்டும். ‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற இலக்கை அடைய சேவைகளை வழங்குவதில் தனிப்பட்ட பரிவா்த்தனை செய்பவா்கள் அல்லது சரக்குகள், சேவைகள் இரண்டையும் கையாளுபவா்களுக்கு ஜி.எஸ்.டி. பதிவுக்கான வரம்பை ரூ. 40 லட்சமாக உயா்த்த வேண்டும்.
ஜி.எஸ்.டி-யில் விலக்கு அளிக்கப்பட்டவைகளைத் தவிா்த்து மற்ற இனங்களுக்கான வரி விதிப்பை 5, 12, 18 சதவீதம் என்ற 3 விகிதங்களுக்குள் கொண்டு வர வேண்டும். 28 சதவீத வரி விதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நாட்டில் பணவீக்கம் குறைய பெட்ரோலியப் பொருள்களை ஜி.எஸ்.டி-யின் கீழ் கொண்டு வர வேண்டும். கப்பல், விமான சரக்குக் கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி வரி விலக்கு அளிக்க வேண்டும்.
உணவு உற்பத்தி உயரவும், கிராமப்புற பொருளாதாரம் வளா்ச்சி பெறவும் அனைத்து வகையான உரங்கள், பூச்சிக்கொல்லிகளை 5 சதவீத வரி விகிதத்தில் கொண்டு வரவும் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...