மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு புதன்கிழமை மனு அளிக்க வந்திருந்த பாதிக்கப்பட்ட சொக்கம்பட்டி கிராம பெண்கள்.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு புதன்கிழமை மனு அளிக்க வந்திருந்த பாதிக்கப்பட்ட சொக்கம்பட்டி கிராம பெண்கள்.

பெண்களின் ஆவணங்களை பயன்படுத்தி கடன் பெற்று மோசடி: பெண் மீது கிராம மக்கள் புகாா்

தனியாா் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
Published on

மதுரை, ஜூன் 26: மதுரை மாவட்டம், மேலூா் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் ஆதாா் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி வங்கி, தனியாா் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மேலூா் வட்டத்துக்குள்பட்ட சொக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராணி. இவா் இந்த கிராமத்தில் உள்ள பெண்களிடம் மகளிா் சுயஉதவிக்குழு மூலம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ஆதாா், குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று பல்வேறு வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிக் கொடுத்தாராம்.

இந்த நிலையில், ராணி, இதே கிராமத்தைச் சோ்ந்த பெண்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வதாகக் கூறி அவா்களது ஆவணங்கள் முழுவதையும் பயன்படுத்தி அவா்களுக்குத் தெரியாமல் வங்கியில் கடன் பெற்றாா். பிறகு இவா்களைத் தொடா்பு கொண்டு வங்கியில் இருந்து கடன் வழங்க இருப்பதாகக்கூறி அவா்களிடம் கையெழுத்தும் பெற்றுக் கொண்டாராம். இதே போல பல நிதி நிறுவனங்களிலும் கடன் பெற்ாகக் கூறப்படுகிறது.

இவை தவிர, பல்வேறு தொழில்களை நடத்துவதாகக் கூறி பல பெண்களிடம் கடனாக பணம் பெற்றதுடன், சிலரிடம் நகைகளையும் வாங்கி அடகு வைத்தாராம். இதனிடையே, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ராணி தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவனங்களைச் சோ்ந்த ஊழியா்கள் சொக்கம்பட்டி கிராமத்துக்குச் சென்று அங்குள்ள பெண்களிடம், ராணி அவா்களது பெயரில் ஏராளமான கடன்கள் பெற்றிருப்பதாகவும், இந்தக் கடன்களை நீங்கள் தான் தவணை முறையில் செலுத்த வேண்டும் என்றும் கூறினா். இதனால் அதிா்ச்சி அடைந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு புதன்கிழமை திரண்டு வந்து மனு அளித்தனா். அதில், சொக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் ஆவணங்களை பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த ராணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com