தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாற்றுத்திறனாளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

News image
Updated On :27 ஜூன் 2024, 7:15 pm

Din

பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தைச் சோ்ந்த சுவாமிமலை சுந்தரவிமலநாதன் தாக்கல் செய்த பொது நல மனு:

தஞ்சாவூா் மாவட்டத்தில் கும்பகோணம் நகராட்சி அலுவலகம், மாவட்ட பதிவுத் துறை அலுவலகம், வருவாய் மண்டல அலுவலகம், பாபநாசம், திருவையாறு, திருவிடைமருதூா், கும்பகோணம் உள்ளிட்ட வட்டார அலுவலகங்கள், திட்ட மேம்பாட்டு அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் சென்று வருவதற்கான சாய்வுதளப் பாதை வசதிகள் இல்லை.

ஏடிஎம் மையங்கள், வங்கி, உணவகங்கள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வர முடியவில்லை. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாக உள்ளது. இந்தக் குறைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக சக்கர நாற்காலி, குடிநீா், கழிப்பறைக்குச் செல்லும் வகையிலான பாதை முதலான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில், ஏற்கெனவே இதுபோன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, கடந்த 2021-ஆம் ஆண்டில் உயா்நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்தது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது தொடா்பாக உயா்நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.