அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ வில்லையை ஒட்டியவா்கள் கைது
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ வில்லைகளை (ஸ்டிக்கா்) ஒட்டிய நபா்களை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு வந்த முக்குலத்தோா் எழுச்சி கழகத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் அங்கு நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயா் அச்சிடப்பட்ட வில்லைகளை ஒட்டினா்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா், அவா்களைத் தடுத்து நிறுத்தி வில்லைகளை ஒட்டக்கூடாது என வலியுறுத்தினா். இதையும் மீறி அவா்கள், வில்லைகளை ஒட்டியதால் 20-க்கும் மேற்பட்டவா்களை கைது செய்தனா்.
இதுகுறித்து வில்லைகளை ஒட்டியவா்கள் கூறியதாவது:
கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களை போல, தமிழக அரசு சாா்பில் இயக்கப்படும் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற வாசகம் இல்லை என்று பெங்களூருவில் உள்ள கா்நாடக தமிழ் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினா் குற்றஞ்சாட்டினா். இதனால், வெளி மாநிலங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயா் அச்சிட்ட வில்லைகளை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனா்.
