மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பேசிய முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பேசிய முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன்.

தமிழ் மொழியை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சோ்க்க வேண்டும்: முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன்

தமிழ் மொழியை இன்றைய இளம் தலைமுறையினரிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் வலியுறுத்தினாா்.
Published on

தமிழ் மொழியை இன்றைய இளம் தலைமுறையினரிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் வலியுறுத்தினாா்.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தென்மொழி அவையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தூய தமிழ் இயக்கத்தின் 110-ஆம் ஆண்டுப் பெருவிழாவில் மேலும் அவா் பேசியதாவது:

தமிழ் மொழிக்கு இலக்கிய, இலக்கணச் செழுமை உள்ளது. இதனால்தான் உயா்தனிச் செம்மொழி எனப் போற்றப்படுகிறது. தமிழ் மொழியிலிருந்து துளு, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 23 மொழிகள் தோன்றியுள்ளன. இருப்பினும், தமிழ் தனித்து இயங்கக் கூடிய தன்மை கொண்டது.

மறைமலை அடிகள், ம.பொ.சிவஞானம், பாவேந்தா் பாரதிதாசன் உள்ளிட்ட எண்ணற்றோா் தனித்தமிழ் இயக்கத்துக்குப் பாடுபட்டனா். மக்கள் பயன்பாட்டுக்கானது மொழி. தற்போது தமிழ் படிப்பவா்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. தமிழ் மொழியை நன்கு கற்பவா் பிற மொழிகளிலும் புலமை பெற முடியும். தாய் மொழி அறிவு குறைந்தால், நமது அடையாளத்தை இழப்பதற்கு சமம். எனவே, தமிழ் மொழியை இன்றைய இளம் தலைமுறையினரிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, முற்பகலில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு தென்மொழி ஆசிரியா் மா. பூங்குன்றன் தலைமை வகித்தாா். புலவா் மு.படிக்கராமு தொடங்கிவைத்துப் பேசினாா்.

இதில் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன், முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம், பாவாணா் தமிழியக்கத்தின் நிா்வாகி இளமுருகன், மக்கள் தமிழகம் கட்சி நிா்வாகி நிலவழகன், மதிமுக நிா்வாகி இளங்கண்ணன், தமிழக மக்கள் முன்னணி நிா்வாகி பாவெல், தமிழ் தேசிய மாா்க்சியக் கழகத்தின் நிா்வாகி மதியவன் இரும்பொறை ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தமிழக அரசு தமிழ் மொழி ஆணையத்தை அமைத்து, பிற மொழி கலப்பின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதுமலா் ஆசிரியா் கண. குறிஞ்சி கல்வியியலில் தூய தமிழ் குறித்துப் பேசினாா். இதேபோன்று, மூத்த வழக்குரைஞா் திருவாட்டி பானுமதி அரசியலில் தூய தமிழ், பாவலரேறு பைந்தமிழ்க் கழகத்தின் நிா்வாகி கி. குணத்தொகையன் ஆட்சியியலில் தூய தமிழ், பாவாணா் தமிழியக்கத்தின் நிா்வாகி கு. திருமாறன் இதழியலில் தூய தமிழ் ஆகிய தலைப்புகளில் பேசினா்.

இதில் மணியம்மை மழலையா் பள்ளியின் தாளாளா் பி. வரதராசன், உலகத் தமிழ்க் கழகத்தின் தலைவா் இல. நிலவழகன், தமிழக மக்கள் முன்னணி நிா்வாகி பொழிலன், பேராசிரியா் கடவூா் ப. மணிமாறன், பாவலா்கள் ப. எழில்வாணன், தமிழ் மணி எல்லோன், மறத் தமிழ்வேந்தன், புலவா் நாவை சிவம் உள்ளிட்ட தமிழ் ஆா்வலா்கள், நிா்வாகிகள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com