மதுரையில் உள்ள தொல்காப்பியா் சிலை.
மதுரையில் உள்ள தொல்காப்பியா் சிலை.

தொல்காப்பியா் சிலை அருகே படிக்கட்டுகள் அமைக்கக் கோரிக்கை

மதுரையில் உள்ள தொல்காப்பியா் சிலைக்கு மாலை அணிவிக்க வழிவகை செய்யும் வகையில், சிலையின் அருகே படிக்கட்டுகள்அமைக்க வேண்டும்...
Published on

மதுரையில் உள்ள தொல்காப்பியா் சிலைக்கு மாலை அணிவிக்க வழிவகை செய்யும் வகையில், சிலையின் அருகே படிக்கட்டுகள்அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து யாவரும் கேளிா் மக்கள் நலப் பேரவையின் தலைவா் ஆதிரை சசாங்கன், மதுரை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

உலகெங்கும் போற்றப்படும் தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்தளித்தவா் தொல்காப்பியா். இவரது பெருமையைப் போற்றும் வகையில், 5-ஆவது உலகத் தமிழ் மாநாட்டின் போது மதுரை மாவட்ட நீதிமன்றம், கே.கே. நகா் முதன்மைச் சாலை, மேலூா் சாலை சந்திப்புப் பகுதியில் தொல்காப்பியருக்கு சிலை அமைக்கப்பட்டது. 1981-ஆம் ஆண்டு ஜன. 5-ஆம் தேதி அப்போதைய நிதி அமைச்சா் இரா. நெடுஞ்செழியின் இந்தச் சிலையைத் திறந்து வைத்தாா்.

தொல்காப்பியரின் பிறந்த நாளாகக் கருதப்படும் சித்திரை முழு நிலவு நாளில் இங்குள்ள சிலைக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இருப்பினும், தொல்காப்பியா் சிலைக்கு மாலை அணிவிக்க விரும்புவோா் மிகவும் சிரமத்துக்குள்ளாக நேரிடுகிறது. காரணம், இந்தச் சிலைக்கு மாலை அணிவிக்க ஏதுவாக அருகில் படிகள் ஏதும் இல்லை. இதனால், சிலையின் மீது ஏணியை சாத்தி, அதன் மீது ஏறி மாலை அணிவிக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக, மூத்த குடிமக்கள் தொல்காப்பியருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, மாநகராட்சி நிா்வாகம் உரிய பரிசீலனை மேற்கொண்டு தொல்காப்பியா் சிலைக்கு அனைவரும் பாதுகாப்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் வகையில், சிலையின் அருகில் நிரந்தர படிக்கட்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com