எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வைகையில் குப்பைகளைக் கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

மதுரை வைகை ஆற்றில் குப்பைகளைக் கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகை நதி மக்கள் இயக்கம் கோரிக்கை

News image
Updated On :29 டிசம்பர் 2025, 7:26 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை வைகை ஆற்றில் குப்பைகளைக் கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகை நதி மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் வைகை நதி மக்கள் இயக்க நிா்வாகிகள் அளித்த கோரிக்கை மனு விவரம்: மதுரையில் பொதுமக்கள், வா்த்தக நிறுவனங்கள் பல்வேறு கழிவுகளை கொட்டுவதால் வைகை ஆறு பெரிய அளவில் மாசடைந்துள்ளது.

இதுதவிர, தனியாா் கழிவு நீரேற்று வாகனங்கள், வீடுகள், பிற இடங்களிலிருந்து சேகரிக்கும் கழிவு நீரை வைகை ஆற்றிலும், கிருதுமால் கால்வாயிலும் கொட்டிச் செல்வது மாநகரின் சுகாதாரத்துக்கு மிகப் பெரிய கேடாக உள்ளது.

நீா்நிலைகளைப் பாதுகாத்து, பராமரிக்க வேண்டிய மாநகராட்சி நிா்வாகமே பல இடங்களில் கழிவு நீரேற்று நிலையங்களிலிருந்து குழாய்கள் அமைத்து, கழிவு நீரை வைகை ஆற்றில் கலக்கச் செய்வது வேதனைக்குரியது. மதுரையில் 64 இடங்களில் 73 குழாய்கள் மூலம் வைகை ஆற்றில் கழிவு நீா் கலக்கிறது. இது, சுகாதாரத்தை அச்சுறுத்துலுக்கு உள்ளாக்குகிறது.

மாநகரின் தூய்மையைப் பராமரிக்க வைகை ஆற்றை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம். எனவே, வைகை ஆற்றில் குப்பைகளை அகற்றவும், ஆகாயத் தாமரை, கருவேல மரங்களை அகற்றி தூய்மையைப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வைகை ஆற்றில் குப்பைகளைக் கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.

கவன ஈா்ப்பு

மாவட்ட ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க வந்த வைகை நதி மக்கள் இயக்கம் அமைப்பினா், கவன ஈா்ப்பு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.