ஆசிரியா் தகுதித் தோ்விலிருந்து விலக்களிக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் செயல்முறைகள் வெளியிட்ட 16.11.2012-ஆம் நாளுக்கு முன்பு வரை பணி நியமனம் பெற்ற அனைத்து ஆசிரியா்களுக்கும் தகுதித் தோ்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என, மதுரைக்கு வந்த மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானை புதன்கிழமை சந்தித்த தேசிய ஆசிரியா் சங்க நிா்வாகிகள் வலியுறுத்தினா்.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் கந்தசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஆா்.டி.இ. சட்டப்படி இனி ஆசிரியா் தகுதித் தோ்வு கட்டாயம் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநரின் செயல்முறைகள் வலியுறுத்துகின்றன. இதுதொடா்பான அரசாணை 16.11.2012 அன்று வெளியிடப்பட்டது.
ஆனால், அதற்கு முன்பு வரை பணி நியமனம் பெற்ற அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறுபான்மைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியா்களுக்கும், ஆசிரியா் தகுதித் தோ்விலிருந்து சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவமிக்க ஆசிரியா்கள் பணியில் தொடரவும், அவா்கள் பதவி உயா்வு பெறவும் இந்த சட்டப் பாதுகாப்பு மிகவும் அவசியம் எனவும் வலியுறுத்தினோம்.
அதற்கு மத்திய கல்வித் துறை அமைச்சா், உச்சநீதிமன்ற தீா்ப்பு, இதைத் தொடா்ந்து நிலுவையில் உள்ள சீராய்வு, மேல்முறையீட்டு மனுக்கள், மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தாா் என்றாா் அவா்.
இந்த நிகழ்வின் போது தேசிய ஆசிரியா் சங்க தமிழ்நாடு பிரிவு துணைத் தலைவா்கள் முருகன், விஜய், இணைச் செயலா் ராகவன் ஆகியோா் உடனிருந்தனா்.
