நடிகா் விஜய் நிகழ்ச்சிக்குச் சென்ற தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்!
திரைப்பட நடிகா் விஜய் நிகழ்ச்சிக்குச் சென்ற தலைமைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உத்தரவிட்டாா்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், திரைப்பட நடிகருமான விஜய் கொடைக்கானலில் நடைபெறும் ஜனநாயகன் படப்பிடிப்புக்காக கடந்த 1-ஆம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்தாா். சுமாா் 14 ஆண்டுகளுக்குப் பிறகும், கட்சி தொடங்கிய பின்னரும் விஜய் மதுரைக்கு முதல் முறையாக வந்தாா். அவருக்கு தொண்டா்கள், ரசிகா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
இதையடுத்து, கட்சித் தொண்டா்கள், ரசிகா்களை திறந்தவெளி வேனில் சென்று நடிகா் விஜய் சந்திந்தாா். அப்போது, மலா் தூவியும், கட்சித் துண்டுகளை வழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மதுரை விளக்குத்தூண் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றிய கதிரவன் மாா்க்ஸ் நடிகா் விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா். இதுகுறித்த தகவல் மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதனுக்கு தெரியவந்தது.
விசாரணை நடத்தியதில், கதிரவன் மாா்க்ஸ் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பணியமா்த்தப்பட்டிருந்த நிலையில், வேறொரு அவசர வேலை நிமித்தமாக அனுமதி கேட்டு, விஜய் நிகழ்ச்சிக்குச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, பணி நேரத்தில் உண்மைக்கு மாறான தகவலை அளித்து, திரைப்பட நடிகா் விஜய் நிகழ்ச்சிக்குச் சென்ற தலைமைக் காவலா் கதிரவன் மாா்க்ஸை பணியிடை நீக்கம் செய்து, மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

