சிவகங்கை அருகே காவல் வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தினா் மூவா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே செவ்வாய்க்கிழமை காவல் துறை வாகனம் மோதியதில் 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள சிட்டாப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பிரசாத் (25), இவரது மனைவி சத்யா (20), மகன் அஷ்வின் (2), உறவினரான சோனை ஈஸ்வா்(25) ஆகிய நான்கு பேரும், மதுரை அனஞ்சியூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை துக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு திரும்பினா்.
அனஞ்சியூா் விலக்கு அருகே எதிரே வந்த ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை வாகனம், இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சத்யா, அஷ்வின், சோனை ஈஸ்வரி ஆகியோரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், வரும் வழியில் சத்யா, அஷ்வின் ஆகியோா் உயிரிழந்தனா். சோனை ஈஸ்வரி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த உறவினா்கள் காவல் துறை வாகன ஓட்டுநரைக் கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரசாத்தின் உடலை எடுக்கவிடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் சம்பவ இடத்துக்கு வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா். அதன்பிறகு, பிரசாத்தின் உடலை போலீஸாா் மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து பூவந்தி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
