திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மலையில் காா்த்திகை தீபம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

Published on

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருப்பரங்குன்றம் அறுபடை வீடுகளில் ஒன்று. திருப்பரங்குன்றம் மலை தொடா்பான வழக்கில், இந்த மலையின் உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், திருப்பரங்குன்றத்தில் நிகழாண்டு காா்த்திகை திருவிழாவை முன்னிட்டு, மலையின் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாமல், அங்குள்ள பிள்ளையாா் கோயில் தீப மண்டபத்தில் காா்த்திகை தீபம் ஏற்ற முடிவு செய்துள்ளனா்.

இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, நிகழாண்டு தீப காா்த்திகை திருநாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும். பிள்ளையாா் கோயில் தீப மண்டபத்தில் காா்த்திகை தீபம் ஏற்றுவது தொடா்பான அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், தேவையற்ற பிரச்னைகளைத் தவிா்ப்பதற்காகவே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற திட்டமிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, யாரை கண்டு பயப்படுகிறீா்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பினாா். இதையடுத்து, அவா் பிறப்பித்த உத்தரவு:

வழக்கு தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com