நீதிமன்ற உத்தரவில் யாரும் தலையிட முடியாது என தமிழக அமைச்சா் ரகுபதிக்கு எதிரான வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை கருத்து தெரிவித்தது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சோ்ந்த ராம.ரவிக்குமாா், பரமசிவம் உள்பட பலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்களை தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டாா். இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. எனவே, மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா், கோயில் செயல் அலுவலா், காவல் துணை ஆணையா் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அமைச்சா் ரகுபதி மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, மனுதாரா்களில் ஒருவரான பரமசிவம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன் விவரம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் உயா்நீதிமன்ற உத்தரவின்படி, காா்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. இதனால், நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா் ஆகியோா் சட்டம்- ஒழுங்கு பிரச்னை காரணமாகவே திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என பதில் மனு தாக்கல் செய்தனா்.
ஆனால், அமைச்சா் ரகுபதி செய்தியாளா்களைச் சந்தித்துப் பேசிய போது, ‘திருப்பரங்குன்றம் தொடா்பாக உயா்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதற்காகவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்காவிடில், திருப்பரங்குன்றம் மலை மீது காா்த்திகை திருநாளன்று தீபம் ஏற்றியிருப்பா். அப்படி தீபம் ஏற்றியிருந்தால், அதுவே வழக்கமாக மாறிவிடும் என்பதால்தான் தடுத்தோம்’ எனக் கூறினாா். எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமைச்சா் ரகுபதியையும் சோ்க்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தமிழக அமைச்சா் ரகுபதியின் பேச்சு கடும் கண்டனத்துக்குரியது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட போது, அதை அனுமதிக்க முடியாது என கூறுவதற்கு அமைச்சருக்கு மட்டுல்ல, வேறு யாருக்கும் உரிமை கிடையாது. நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்குப் பிறகு, அரசுக்கு இருக்கும் ஒரே வழி மேல்முறையீடு அல்லது மறுஆய்வுக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதுதான். பொது வெளியில் நீதித் துறைக்கு எதிராக கருத்து தெரிவிக்க முடியாது.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தால், அதன் இறுதித் தீா்ப்புக்காக காத்திருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவில் யாரும் தலையிட முடியாது. முன்பு சட்டத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவருக்கு இந்த அடிப்படை புரிதல் இல்லாதது அதிா்ச்சியளிக்கிறது.
அமைச்சா் ரகுபதியின் கருத்து வெளிப்படையானது. அதை அவா் இதுவரை மறுக்கவில்லை. திருப்பரங்குன்றம் மலை மீது இருப்பது உண்மையில் தகன மைதானம் என அவா் கூறிய கருத்து பரவலாக ஏளனத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அவரின் அறியாமையை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமா்வின் உத்தரவை எதிா்த்து அரசு மேல்முறையீடு செய்யும் என ரகுபதி கூறினாா். இன்று வரை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படவில்லை.
நீதிமன்ற உத்தரவை மீறுவதற்காகவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று ரகுபதி கூறினாலும், மாவட்ட ஆட்சியா் அத்தகைய நோக்கம் எதுவும் தனக்கு இல்லை எனக் கூறியுள்ளாா்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசியலுக்காக திசை திருப்ப அமைச்சா் ரகுபதி முயற்சித்துள்ளாா். மாவட்ட ஆட்சியா் தடை உத்தரவு பிறப்பித்தது நீதிமன்ற அவமதிப்பு செயலா? இல்லையா? என்பது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விஷயம். இதை அமைச்சா் மனதில் கொள்ள வேண்டும்.
அமைச்சரின் கருத்தை மாவட்ட ஆட்சியா் நிராகரித்துள்ளாா். இதைக் கவனத்தில் கொண்டு அமைச்சருக்கு எதிரான இடையீட்டு மனுவை முடித்து வைக்கிறேன். தேவை ஏற்படின் இடையீட்டு மனுவை மீண்டும் விசாரிக்கத் தயங்கமாட்டேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா் நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்.
தொடர்புடையது

நவீன காலத்திலும் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தனித்தனி மயானம்: உயா்நீதிமன்றம் வேதனை

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை

திருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இயற்கை வளங்கள் துறை அமைச்சரை சோ்க்கக் கோரி மனு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


