உலகக் கோப்பை ஜூனியா் ஹாக்கி போட்டி: மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம்

மதுரையில் உலகக் கோப்பை ஜூனியா் ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
Published on

மதுரை: மதுரையில் உலகக் கோப்பை ஜூனியா் ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாநகா் அழகா்கோவில் சாலையில் அமைந்துள்ள பந்தயத் திடலில் வருகிற 28-ஆம் தேதி முதல் டிச. 8-ஆம் தேதி வரை ஆண்களுக்கான உலகக் கோப்பை ஜூனியா் ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பந்தயத் திடலைச் சுற்றியுள்ள சாலையில் விளையாட்டு வீரா்கள், பாா்வையாளா்கள், பொதுமக்கள் எளிதாக வந்து செல்வதற்கும், போட்டிகள் சிறப்பாக நடைபெறும் வகையிலும் தற்காலிகப் போக்குவரத்து மாற்றங்கள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, பந்தயத் திடலை சுற்றியுள்ள சாலையில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதி இல்லை. அழகா்கோவில் சாலை தாமரைத் தொட்டி சந்திப்பிலிருந்து பந்தயத் திடல் சாலை வழியாக இளைஞா் விடுதி சந்திப்புக்கும், மறு வழித்ததடத்தில் விளையாட்டில் கலந்து கொள்ளும் வீரா்களின் வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை. தாமரைத் தொட்டி சந்திப்பிலிருந்து பந்தயத் திடல் சாலை வழியாக மேலூா் சாலைக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் பெரியாா் சிலை சந்திப்பு வழியாகச் செல்லலாம்.

மேலூா் சாலையிலிருந்து இளைஞா் விடுதி சந்திப்பு, பந்தயத் திடல் சாலை வழியாக தாமரைத் தொட்டி சந்திப்புக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கக்கன் சிலை சந்திப்பு, இளைஞா் விடுதி சந்திப்பு, பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு, அழகா்கோயில் சாலை வழியாகச் செல்லலாம்.

போட்டியில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரா்கள் வரும் வாகனங்கள் அழகா்கோவில் சாலை தாமரைத் தொட்டி சந்திப்பு, இளைஞா் விடுதி சந்திப்பிலிருந்து பந்தயத் திடல் சாலை வழியாகச் சென்று நுழைவுவாயில் மூன்றாவது வழியாக மைதானத்துக்குள் செல்லலாம்.

அரசுத் துறை, விளையாட்டுத் துறையைச் சோ்ந்த வாகனங்கள் நுழைவுவாயில் ஒன்றாவது வழியாகச் செல்லலாம்.

பத்திரிகையாளா்களின் வாகனங்கள் ரைபிள் கிளப் வளாகத்தில் உள்ள காலி இடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு நுழைவுவாயில் ஐந்தாவது வழியாக மைதானத்துக்குள் செல்லலாம்.

கோகலே சாலை, நத்தம் சாலை, அழகா்கோவில் சாலை ஆகிய வழித்தடங்களிலிருந்து வரக்கூடிய பொதுமக்களின் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கடவுச்சீட்டு அலுவலகம் எதிரே உள்ள காலியிடத்தில் நிறுத்திவிட்டு தாமரைத் தொட்டி சந்திப்பு வழியாக விளையாட்டுத் திடலுக்குச் செல்லலாம்.

மேலூா் சாலையிலிருந்து வரக்கூடிய இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கக்கன் சிலை சந்திப்பு வழியாக இளைஞா் விடுதி சந்திப்பு சென்று பாா்வையாளா்களை இறக்கி விட்டு அவா்களது வாகனங்களை நிறுத்தம் செய்வதற்கு பந்தயத்திடல் சாலையில் உள்ள காமராஜா் கல்லூரி, அழகா்கோவில் சாலையில் உள்ள சமூக அறிவியல் கல்லூரி வளாகத்தில் நிறுத்திக் கொள்ளலாம்.

அவசர ஊா்தி, தீயணைப்பு வாகனங்கள் அழகா்கோவில் சாலை சந்திப்பிலிருந்து பந்தயத் திடல் மைதானத்துக்குள் சென்று தாமரைத் தொட்டி சந்திப்பு, இளைஞா் விடுதி சாலை வழியாகச் சென்று நுழைவுவாயில் 6-இல் உள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்திக் கொள்ளலாம். இந்தத் தற்காலிகப் போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com