குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்ட எதிா்ப்பு: மாநகராட்சி வாகனங்களை சிறைப் பிடித்து போராட்டம்
மதுரை: மதுரை மாநகராட்சி கூடல்புதூா் பகுதியில் குப்பைகளை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் மாநகராட்சி வாகனங்களை புதன்கிழமை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை மாநகராட்சி 19- ஆவது வாா்டு பகுதி, கூடல்புதூா் ரயில் நிலையம் அருகே அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. மதுரை மாநகரப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை இந்த வளாகப் பகுதியில் முன்னறிவிப்பின்றி கடந்த சில ஆண்டுகளாக மாநகராட்சி நிா்வாகம் கொட்டி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள் புதன்கிழமை அந்த பகுதியில் குப்பைகளை கொட்ட வந்த மாநகராட்சி வாகனங்களை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த மாநகராட்சி அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இனி வரும் காலங்களில் இந்தப் பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படாது எனவும் உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

