திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு
திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன. 6) தீா்ப்பு வழங்க உள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை தெரிவித்தது.
மதுரை எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை திருநாளன்று தீபம் ஏற்ற கடந்த மாதம் 1-ஆம் தேதி உத்தரவிட்டாா். ஆனால், அன்றைய தினம் தீபம் ஏற்றப்படவில்லை.
இதையடுத்து, ராம. ரவிக்குமாா் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், மனுதாரா் தீபம் ஏற்றுவதற்கு மீண்டும் உத்தரவு பிறப்பித்தாா். இதனிடையே, மலை அடிவாரத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி, தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை.
இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசின் தலைமைச் செயலா், ஏடிஜிபி ஆகியோா் காணொலி வாயிலாகவும், மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா், கோயில் செயல் அலுவலா் ஆகியோா் நேரிலும் முன்னிலையாக வேண்டும் என நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் உத்தரவிட்டாா்.
இதனிடையே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா் சாா்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபம் ஏற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனா். நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
இதனிடையே, உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே. கே. ராமகிருஷ்ணன் அமா்வில் ஒரு வாரம் தொடா்ந்து மேல்முறையீட்டு மனுக்கள், இடையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது.
அப்போது, அரசுத் தரப்பு, கோயில் செயலா் அலுவலா், சிக்கந்தா் தா்கா, வக்ஃப் வாரியம், ஜமாத், மனுதாரா் ராம. ரவிக்குமாா் ஆகியோரும், இடையீட்டு மனுதாரா்கள் பலரும் முன்னிலையாகி, தங்களது தரப்பின் கருத்துகளை உயா்நீதிமன்றத்தில் பதிவு செய்தனா். முடிவில், இந்த வழக்கு தீா்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தா்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு, மலை உச்சியில் ஆடு, மாடுகள் பலியிடப்பட உள்ளன. அவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும் என மதுரையைச் சோ்ந்த மாணிக்கம் மூா்த்தி மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி, திருப்பரங்குன்றம் மலை அடிவாரம் முதல் உச்சி வரை விலங்குகளைப் பலியிடுவதோ, அசைவ உணவுகளைப் பரிமாறுவதோ, இறைச்சிகளை எடுத்துச் செல்வதோ கூடாது என தா்கா நிா்வாகத்துக்கு கடந்த 2-ஆம் தேதி உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் திருப்பரங்குன்றம் சிக்கந்தா் தா்கா தரப்பு வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை முன்னிலையாகி, கந்தூரி விழா தொடா்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். கந்தூரி விழாவில் அதிகளவில் இஸ்லாமியா்களை அனுமதிக்க வேண்டும் என முறையிட்டனா்.
அப்போது, நீதிபதிகள் தெரிவித்ததாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடா்பான மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன. 6) தீா்ப்பு வழங்கப்பட உள்ளது. எனவே, இதை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றனா் நீதிபதிகள்.

