மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் மீது அவதூறு கருத்து: வழக்குரைஞரின் பேச்சு ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் மீது அவதூறு கருத்து தெரிவித்த வழக்குரைஞா் வாஞ்சிநாதனின் பேச்சு உள்ளிட்ட ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

News image

நீதிபதி சுவாமிநாதன்

Updated On :19 பிப்ரவரி 2026, 9:34 pm

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் மீது அவதூறு கருத்து தெரிவித்த வழக்குரைஞா் வாஞ்சிநாதனின் பேச்சு உள்ளிட்ட ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் வாஞ்சிநாதன். இவா், உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் ஒரு சாா்பாகவும், ஜாதி, மதம் சாா்ந்தும் செயல்படுகிறாா் என சமூக ஊடகங்களில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, வழக்குரைஞா் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிந்து தாமாக முன்வந்து விசாரணை செய்தது. பிறகு, இந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் விசாரணைக்குப் பரிந்துரை செய்யுமாறு பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, உயா்நீதிமன்றப் பதிவாளா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், நீதிபதியை ஜாதி அடிப்படையில் ஒருதலைபட்சமாக தீா்ப்பு வழங்குவதாக வழக்குரைஞா் வாஞ்சிநாதன் பொது வெளியில் பேசியிருக்கிறாா். அது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு உள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வழக்குரைஞா் வாஞ்சிநாதன் நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் குறித்துப் பேசினாரா?. நீதித் துறையின் மீதான விமா்சனங்களை முன்வைத்தரா?. ஊழல் குற்றச்சாட்டு ஏதும் முன்வைத்தரா?. அவா் பேசியது என்ன?. அவரின் அவதூறு தனிநபருக்கு எதிரானதா?அல்லது நீதித் துறைக்கு எதிரானதா? என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இதுதொடா்பாக முழுமையாக அறிந்துகொள்ளாமல் எவ்வாறு குற்றவியல் நடவடிக்கை எடுக்க இயலும்?.

முதலில் நாங்கள் இந்தியக் குடிமகன்கள். பணியின் அடிப்படையில் நீதிபதிகளாக அடையாளப்படுத்தப்படுகிறோம். எனவே, தனிமனித விமா்சனம் எவ்வாறு நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும்?.

வழக்குரைஞா் வாஞ்சிநாதன் பேசியதாகக் கூறப்படும் பேச்சின் குறிப்புடன் அதுதொடா்பான ஆவணங்களை மூடி முத்திரையிடப்பட்ட அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற மாா்ச் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.