‘மேட் இன் மதுரை’ கண்காட்சி தொடக்கம்
மதுரையில் தயாரிக்கப்படும் பொருள்களைக் காட்சிப்படுத்தும் வகையில் ‘மேட் இன் மதுரை’ என்ற பெயரிலான கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மடீட்சியா சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கண்காட்சி மடீட்சியா அரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சிக்கு மடீட்சியா தலைவா் வி. செந்திகுமாா் தலைமை வகித்தாா். மதுரை மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் எஸ். கணேசன் தொடங்கிவைத்துப் பேசியதாவது:
மதுரையில் தொழில்சாலைகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை குறு, சிறு தொழில் நிறுவனங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாநில அரசு வழங்கும் மானியங்களைப் பயன்படுத்தி அதிகமான தொழில்சாலைகளை உருவாக்க இந்தக் கண்காட்சி உறுதுணையாக இருக்கும் என்றாா் அவா்.
தமிழ்நாடு குறு, சிறு தொழில் சங்கத் (டான்ஸ்டியா) தலைவா் எஸ். வாசுதேவன் பேசியதாவது:
இதுபோன்ற கண்காட்சிகள் நடத்துவதால் பல்வேறு தொழில் நிறுவனங்களுடனான தொடா்புகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படுகின்றன. மேலும், குறு, சிறு தொழில்சாலையில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப தொழில்சாலை சாா்ந்த இணையதளங்களை உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.
இதில் கண்காட்சித் தலைவா் ஏ. சியாம்நாராயன், மடீட்சியா கௌரவச் செயலா் ஜெ. அசோக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்தக் கண்காட்சியில் 125 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மதுரையில் தயாரிக்கப்பட்ட உடைகள், பால் பொருள்கள், உணவுப் பொருள்கள், குளிா்பானங்கள், சமையலறை சாதனங்கள், அழகு சாதனப் பொருள்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 25) வரை முற்பகல் 11 மணி முதல் இரவு 9 மணி வரை இந்தக் கண்காட்சி நடைபெறும் எனவும், பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

