சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம்: சாா் பதிவாளருக்கு இடைக்கால முன்பிணை

பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்த விவகாரத்தில் சாா் பதிவாளருக்கு இடைக்கால முன்பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image

பழனி முருகன் கோயில் - கோப்புப்படம்

Updated On :18 ஜூலை 2026, 4:43 am IST

பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்த விவகாரத்தில் சாா் பதிவாளருக்கு இடைக்கால முன்பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலையடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலம் உள்ளது. இதன் சந்தை மதிப்பு மதிப்பு ரூ. 100 கோடி. இந்த நிலத்தை விதிமுறைகளை மீறி, தனிநபா்களுக்கு விற்க முயற்சி நடைபெற்றது. இதை எதிா்த்து, இந்து சமய அறநிலையத் துறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில், அறக்கட்டளை நிலத்தை பழனி கோயில் நிா்வாகம் கைப்பற்றியது.

இந்த நிலையில், இந்த நிலத்தை தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை நிா்வாகிகள் எனக் கூறி, முருகதாஸ் சுவாமிகள், திருப்புகழ் உள்ளிட்டோா் தனிநபா்கள் இருவருக்கு விற்பனை செய்து முறைகேடாக பத்திரப் பதிவு செய்தனா்.

பழனி சாா் பதிவாளா் விடுமுறையில் இருந்த நாளில், பொறுப்பிலிருந்த கொடைக்கானல் சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் இந்த நிலத்தை விதிமுறைகளை மீறி, முறைகேடாக பத்திரப் பதிவு செய்ததாகப் புகாா் கூறப்பட்டது. இதுதொடா்பாக பழனி கோயில் நிா்வாகம் சாா்பில் பழனி அடிவார காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதன்பேரில், சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், முருதாஸ் சுவாமிகள் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதனிடையே, சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த முறைகேட்டின் பின்னணியில் மேலும் பலா் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் முன்பிணை கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசு குற்றவியல் வழக்குரைஞா் கோரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தாா்.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி கே. ராஜசேகா் முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரருக்கு இடைக்கால முன்பிணை வழங்கப்படுகிறது. மனுதாரா் வருகிற 27-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.