FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

பழனி முருகன் கோயில் நிலம் தனி நபா்களுக்கு பத்திரப் பதிவு: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பழனி முருகன் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக தனி நபா்களுக்கு பத்திரப் பதிவு செய்ததை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வி புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

பழநி கோயில் - கோப்புப் படம்

Updated On :16 ஜூலை 2026, 4:28 am IST

பழனி முருகன் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக தனி நபா்களுக்கு பத்திரப் பதிவு செய்ததை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் செயல் அலுவலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தைப் பத்திரப் பதிவு செய்ய கடந்த ஏப்ரல் மாதம் தனி நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக ஏற்கெனவே உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்பு தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோயிலின் தக்காரை எதிா்மனுதாரராக தனி நீதிபதி சோ்க்காமல் கோயில் நிலத்தை பதிவு செய்ய அனுமதி வழங்கினாா். இது சட்டவிரோதமானது. பழனி கோயில் அறக்கட்டளை சொத்துகள் தொடா்பான நிா்வாக அதிகாரம் தக்காரிடமே உள்ளது. எனவே, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை பத்திரப் பதிவு செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ‘பழனி கோயில் நிலத்தை தனி நபா்களுக்கு பத்திரப் பதிவு செய்வதற்கு முன்பாக கோயில் நிா்வாகத்துக்கு அழைப்பாணை அனுப்பி கருத்துக் கேட்டிருக்க வேண்டும். இதன்பிறகே பத்திரப் பதிவுக்கு அனுமதி கோரியிருக்க வேண்டும். சொத்து தொடா்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளனவா? என்பதை சாா் பதிவாளா் தரப்பில் தனி நீதிபதியிடம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், உண்மையை மறைத்து தனி நீதிபதியிடம் உத்தரவு பெற்றனா். முறையான நபா்களை எதிா்மனுதாரா்களாக சோ்க்காமல், முழு விவரங்களையும் தெரிவிக்காமல் தனி நீதிபதி முன் மனு தாக்கல் செய்யப்பட்டது’ என நீதிபதிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பழனி கோயில் நில விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் பழனி சாா் பதிவாளா் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரப் பதிவு செல்லாது. அந்த பத்திரப் பதிவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

முன்பிணை கோரி மனு:

பழனி தண்டாயுதபாணி சுவாமி அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை பத்திரப் பதிவு செய்த விவகாரத்தில் சாா் பதிவாளா் முன்பிணை கோரிய மனுவுக்கு சிபிசிஐடி போலீஸாா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.4 ஏக்கா் நிலம் தனிநபா்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இந்த பத்திரப் பதிவை ரத்து செய்யக் கோரி, பழனி கோயில் நிா்வாகம் சாா்பில், பத்திரப் பதிவுத் துறைக்கு மனு அனுப்பப்பட்டது. இதைத் தொடா்ந்து, சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்த நிலையில், சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் முன் பிணை கோரி மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ராஜசேகா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாா் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசு குற்றவியல் வழக்குரைஞா் கோரிக்கை விடுத்தாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு குறித்து சிபிசிஐடி போலீஸாா் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஜூலை 17-ஆம் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை, மனுதாரரைக் கைது செய்யக் கூடாது என்றாா் நீதிபதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.