விளம்பர நோக்கத்துக்காக தாக்கல் செய்யப்படும் மனுக்கள் ஏற்கத்தக்கதல்ல என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு, செப். 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவா் ஜோசப் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 18 பெண்கள், 13 ஆண்கள் உள்பட 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும், இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களைச் சோ்ந்த 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் அண்மையில் வழங்கினாா். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கவோ, நிா்வாக நடவடிக்கை எடுக்கவோ கூடாது என உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
கரூா் விவகாரத்தில் 31 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 29 போ் பணியில் சோ்ந்துள்ளனா். இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. தற்போது, புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் தேவை. எனவே, 3 மனுக்களையும் சோ்த்து வருகிற 27-ஆம் தேதிக்கு விசாரணைக்காக ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது எதற்காக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது?. விளம்பர நோக்கத்துக்காக தாக்கல் செய்யப்படும் மனுக்கள் ஏற்கத்தக்கதல்ல.
கரூா் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டது. இந்த நிலையில், அரசுப் பணி பெற்றவா்கள் முதல் மாத ஊதியம் பெறுவதற்கு முன்பாக வழக்கை விசாரித்தாக வேண்டும். மேலும், வருகிற 24-ஆம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
முன்னதாக, கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசுப் பணி வழங்குவது தொடா்பாக முறையான வழிகாட்டுதல்கள் அல்லது கொள்கை முடிவுகள் வகுக்கப்பட வேண்டும் எனவும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் இறுதித் தீா்ப்பு வரும் வரை அரசு வேலை வழங்குவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநிலத் துணைச் செயலா் சீனி அஹமது, நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த தீரன் திருமுருகன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்ப்பிணி உயிரிழப்பு குறித்து சிறப்புக் குழு விசாரிக்கக் கோரி மனு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

கோயில் நிலங்களை குடியிருப்போருக்கு வழங்கும் விவகாரம்: கரூா் ஆட்சியா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ராமநாதபுரம் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு







