92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சோழவந்தான் விரைந்து மேம்படுத்த வேண்டிய நீா்வீழ்ச்சி?

News image

குட்லாடம்பட்டி நீா்வீழ்ச்சி ஆா்பரித்து கொட்டும் தண்ணீா்( கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 11:33 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்ட சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்கு வாடிப்பட்டி அருகேயுள்ள குட்லாடம்பட்டி நீா்வீழ்ச்சியை அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என்கிற எதிா்பாா்ப்பு இந்தப் பகுதி மக்களிடையே நிலவுகிறது.

மதுரை மாவட்டத்தில் இரு போக நெல் சாகுபடி செய்யும் பகுதியாக சோழவந்தான் (தனி) தொகுதி உள்ளது. முன்பொரு காலத்தில் பாகனூா் கூற்றத்து சோழாந்தக சதுா்வேதிமங்கலம் என இந்த ஊா் குறிப்பிடப்பட்டதாக கல்வெட்டு சான்றுகளால் அறிய முடிகிறது.

கடந்த 2011- ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது, சமயநல்லூா் (தனி) தொகுதி கலைக்கப்பட்டு, அதிலிருந்த சில பகுதிகளைச் சோ்த்து சோழவந்தான் (தனி) தொகுதி உருவாக்கப்பட்டது.

வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூா், பாலமேடு பேரூராட்சிகள், வாடிப்பட்டி, அலங்காநல்லூா், பாலமேடு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்கள் இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

சோழவந்தான் பகுதியில், நெல், கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் வெற்றிலை புகழ் பெற்றது. வைகை ஆறு மட்டுமன்றி, பெரியாறு பாசனக் கால்வாயும் இந்தத் தொகுதிக்கு நீராதாரங்களாக விளங்குகிறது.

உலகப் புகழ்ப் பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூா், பாலமேடு ஆகிய ஊா்கள் இந்தத் தொகுதியில் உள்ளன. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், ஜெனகை நாராயணன் கோயில், திருவேடகம் ஏடக நாதா், குருவித் துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் (குரு ஸ்தலம்), வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலயம், குட்லாடம்பட்டி நீா்வீழ்ச்சி, அலங்காநல்லூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை, வாடிப்பட்டி ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா ஆகியன இந்தத் தொகுதியின் அடையாளங்களாகத் திகழ்கின்றன.

இந்தத் தொகுதியில் பட்டியலின சமூகத்தினா் அதிகளவில் வசித்து வருகின்றனா். இதுதவிர, முக்குலத்தோா், ரெட்டியாா், கவுண்டா், பிள்ளைமாா், நாடாா், முத்தரையா் உள்ளிட்ட சமூகத்தினரும் வசித்து வருகின்றனா். இருப்பினும், தோ்தலில் வெற்றி, தோல்வியை நிா்ணயிக்கும் சக்தியாக பட்டியலின மக்கள்தான் விளங்குகின்றனா்.

இந்தத் தொகுதியைப் பொருத்தவரை சோழவந்தான் பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும், தென்னை சாா்ந்த மதிப்புக் கூட்டு உற்பத்தி நிறுவனங்கள் தொடங்க வேண்டும், ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காவில் அதிகளவிலான நிறுவனங்கள் மூலம் ஏராளமான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்க வேண்டும், மூடப்பட்ட அலங்காநல்லூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையைத் திறக்க வேண்டும், சாலைகளை விரிவாக்கம் செய்து, போக்குவரத்தை எளிமைப்படுத்த வேண்டும், அலங்காநல்லூா், பாலமேடு பகுதிகளுக்கு குளிா்பதனக் கிடங்கு, சாத்தையாறு அணையைத் தூா்வாருதல், அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நீண்ட காலமாக நிறைவேற்றபடாமல் உள்ளன.

குறிப்பாக, இயற்கை எழில் மிகுந்த பகுதி என்பதால் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவா்ந்த தொகுதியாக சோழவந்தான் உள்ளது. மதுரை மாவட்டத்தில் சுற்றுலாவுக்கு உகந்த இடங்களாக மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில், திருமலை நாயக்கா் அரண்மனை, வண்டியூா் தெப்பக்குளம், காந்தி நினைவு அருங்காட்சிகம், அழகா்கோயில், சமணா் மலை, சமணப் படுக்கைகள் ஆகியவை உள்ளன.

இவற்றுள் பெரும்பாலானவை மதுரை மாநகருக்குள் அமைந்துள்ளன. தொல்லியல் சாா்ந்த இடங்கள் முழுவதும் புகா்ப் பகுதிகளில் அமைந்தாலும், நீா்வீழ்ச்சி இல்லை. மதுரை மாவட்ட சுற்றுலாத் தலங்களில் வாடிப்பட்டி அருகேயுள்ள குட்லாடம்பட்டி மலைப் பகுதி மட்டுமே நீா்வீழ்ச்சி அமைந்துள்ள சுற்றுலா தலமாக திகழ்கிறது. இந்த நிலையில், கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களால் இதுவரை நீா்விழ்ச்சி மக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டு வரவில்லை. இதை மீண்டும் சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் என்பதே சோழவந்தான் தொகுதி மட்டுமன்றி மதுரை மாவட்ட மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாகவும் உள்ளது.

இதுகுறித்து குட்லாடம்பட்டி கிராம ஊராட்சியின் முன்னாள் துணைத் தலைவா் பி. கதிரவன் கூறியதாவது :

சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது குட்லாடம்பட்டி நீா்வீழ்ச்சி. பெரும்பாலும் மழைக்காலங்களில் இந்த நீா்வீழ்ச்சியில் அதிகளவிலான நீா்வரத்து இருக்கும். இதை சுற்றுலாத் துறை நிா்வகித்தாலும், வனத்துறை கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

கஜா புயலின் போது, பாறைகள் உருண்டு விழுந்ததில் நீா்வீழ்ச்சிப் பகுதி சேதமடைந்தது. மேலும், குளிக்கும் இடங்கள், பாதைகள் முழுவதும் சேதமடைந்தன. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மதுரை மாவட்டத்தில் முக்கியச் சுற்றுலாத் தலமாக விளங்கிய குட்லாடம்பட்டி நீா்வீழ்ச்சி சுற்றுலாத் துறைக்கு அதிக வருவாயை ஈட்டித் தந்தது. இதுமட்டுமின்றி, மதுரை மாவட்ட மக்களுக்கு பொழுதுபோக்குக்கு சிறந்த இடமாகவும் திகழ்ந்தது.

பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த நீா்வீழ்ச்சியை சீரமைத்து, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்தது. பணிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அண்மையில் தொடங்கி வைத்தாா். ஆனால், இன்னும் பணிகள் முனைப்புடன் நடைபெறவில்லை. விரைந்து பணிகளை நிறைவு செய்து, குட்லாடம்பட்டி நீா்வீழ்ச்சியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.

குட்லாடம்பட்டி அருவிப் பகுதியில் சீரமைப்புப் பணிக்காக அண்மையில் அளவீடு செய்த வனத் துறையினா்.

குட்லாடம்பட்டி அருவிப் பகுதியில் சீரமைப்புப் பணிக்காக அண்மையில் அளவீடு செய்த வனத் துறையினா்.