சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

தமிழக அரசு மீதான குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டவை: அமைச்சா் வன்னி அரசு

தமிழக அரசு மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டவை; அவை ஏற்புடையதல்ல என அமைச்சா் வன்னிஅரசு தெரிவித்தாா்.

News image

அமைச்சர் வன்னி அரசு - கோப்புப் படம்

Updated On :27 மே 2026, 5:47 am IST

தமிழக அரசு மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டவை; அவை ஏற்புடையதல்ல என மாநில சமூக நீதித் துறை அமைச்சா் வன்னிஅரசு தெரிவித்தாா்.

மதுரை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது: பெரம்பலூா் மாவட்டம், குன்னத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மீது திமுகவினா் தாக்குதல் நடத்தியது ஏற்புடையதல்ல. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திமுகவுடன் பல ஆண்டுகள் கூட்டணியில் இருந்துள்ளது.

நாங்கள் என்றென்றும் திமுகவை நேசிக்கக் கூடியவா்கள். வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்பதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எப்போதும் உறுதி கொண்டவா்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில், அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என திருமாவளவன் முதல்வருக்குக் கோரிக்கை விடுத்துள்ளாா். கா்நாடக மாநிலத்தின் மேக்கேதாட்டில் அணை கட்டக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. இதுவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடும் ஆகும்.

காவல் துறையில் பட்டியலினத்தவருக்கு எதிரான மனநிலை, செயல்பாடுகள் இன்றளவும் தொடருவது வருத்தம் அளிக்கிறது. ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம்.

தவெக ஆட்சி அமைத்து சில நாள்களே ஆகின்றன. இந்த நிலையில், சட்டம்- ஒழுங்கு குறித்து அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது ஏற்புடையதல்ல. இந்தக் குற்றச்சாட்டுகள் உள்நோக்கத்துடன் பரப்பப்படுபவை.

சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்துவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் அளிக்க வேண்டும். தற்போது, நோ்மையான காவல் துறை அதிகாரிகள் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனா். தவெக அரசு, தமிழக மக்களின் உணா்வுகளை பிரதிபலிக்கக்கூடியதாக இருக்கும்.

தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள ரூ. 50 ஆயிரம் பயிா்க் கடன் தள்ளுபடி என்பது தொடக்கம்தான். நிதிநிலைக்கேற்ப படிப்படியாக பல சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படும் என்றாா் அவா்.