/

3 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

குறைதீர் கூட்டத்தில் விண்ணப்பித்து 7 நாள்களில் 3 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஆட்சியர் டி.ஜி. வினய் திங்கள்கிழமை வழங்கினார்.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:56 am IST

குறைதீர் கூட்டத்தில் விண்ணப்பித்து 7 நாள்களில் 3 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஆட்சியர் டி.ஜி. வினய் திங்கள்கிழமை வழங்கினார்.
      திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்       திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். கூட்டத்தின்போது, காசநோயாளிகளைப் பதிவு செய்வதற்கென 20 களப் பணியாளர்களுக்கு கையடக்க மடிக்கணினிகளை ஆட்சியர் வழங்கினார். 
கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்த 3 திருநங்கைகளுக்கு, வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 6 ஆயிரம் மதிப்பீட்டில் 3 சக்கர சைக்கிள், ரூ.1,800 மதிப்பீட்டில் காதொலிக் கருவி மற்றும் 25 பேருக்கு இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.
முன்னதாக, காலை 10 மணிக்கு நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து ஆட்சியர் வினய் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாநகராட்சி தொடர்பான மனு ஆய்வின்போது விளக்கம் கேட்பதற்காக, மாநகராட்சி ஆணையரை ஆட்சியர் வினய் அழைத்தார். ஆனால், ஆணையருக்குப் பதிலாக உதவி நகரமைப்பு அலுவலர் உதயகுமார் விளக்கம் அளிக்க முயன்றார். 
கடந்த மாத கூட்டத்தின்போதே ஆணையர் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதும் முன் அறிவிப்பு இல்லாமல் கூட்டத்தில் பங்கேற்காத ஆணையர் மனோகரன் எங்கு இருக்கிறார் என ஆட்சியர் கேள்வி எழுப்பினார். அலுவலகத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, உடனடியாக கூட்டத்துக்கு வரவேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டார். அதையடுத்து, 30 நிமிடங்களுக்குள் கூட்ட அரங்குக்கு வந்த ஆணையர் மனோகர் விளக்கம் அளித்தார். 
அதேபோல், 30 முதல் 45 நிமிடங்கள் வரை கூட்டத்துக்கு தாமதமாக வந்த அலுவலர்களை மாவட்ட வருவாய் அலுவலர் பா. வேலு எச்சரித்தார். அடுத்த கூட்டம் முதல் காலை 9.30 மணிக்கு கூட்ட அரங்குக்கு வரவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், நலப்பணிகள் இணை இயக்குநர் ஜெ. மாலதி பிரகாஷ், துணை இயக்குநர்(காசநோய்) ராமசந்திரன், தனித்துணை ஆட்சியர் இந்திரவள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.