திண்டுக்கல், தேனி மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற 71-ஆவது சுதந்திர தின விழாவில் ரூ.79.24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், காலை 9.20 மணிக்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, காவல் துறை, ஊர்க்காவல் படை, என்.சி.சி அணி வகுப்பு மரியாதை நடைபெற்றது. காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட ஆட்சியர் வினய், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த 105 அரசு அலுவலர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை ஆட்சியர் வழங்கினார். பின்னர், பல்வேறு துறைகளின் சார்பில், 101 பயனாளிகளுக்கு ரூ.37.60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, 6 பள்ளிகளைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் காவல்துறை துணைத் தலைவர் கே.ஜோஷி நிர்மல்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சக்திவேல், மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேனியில்: தேனியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், சுந்திர போராட்ட தியாகிகளுக்கு கதர் ஆடை அணிவித்து கௌரவித்தார். காவல் துறை ஆயுதப் படை பிரிவு சார்பில் அணி வகுப்பு மரியாதை நடைபெற்றது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னாள் படை வீரர் நலத்துறை, வருவாய்த்துறை, சமூக பாதுகாப்புத் துறை, பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, மகளிர் திட்டம், வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறை, தொழிலாளர் நலத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆகியவற்றின் சார்பில் 62 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.41.64 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 219 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அகமலை ஊராட்சியில் உள்ள சொக்கனலை மலை கிராம மக்களுக்கு கழிப்பறைகள் கட்டி வழங்கிய விழுதுகள் இளைஞர் பெருமன்றத்திற்கு மத்திய அரசு சார்பில் சிறந்த இளையோர் மன்ற விருது, பாராட்டுச் சான்றிதழை ஆட்சியர் வழங்கினார். அதைத்தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், மனித நேய காப்பக குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் சுந்திர தின விழாவையொட்டி நடைபெற்ற சமபந்தி விருந்தில் ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டனர்.