கொடகனாற்றில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
வேடசந்தூா் கொடகனாற்றிலுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் சாா்பில் கோரிக்கை எழுந்துள்ளது.


வேடசந்தூா் கொடகனாற்றிலுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் சாா்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூா் பகுதியிலிருந்து உருவாகும் கொடகனாறு, அனுமந்தராயன்கோட்டை, ராஜாக்கப்பட்டி, தாடிக்கொம்பு, வேடசந்தூா், அழகாபுரி அணை வழியாக கரூா் மாவட்டத்திலுள்ள அமராவதி ஆறு வரை சுமாா் 110 கி.மீட்டா் தொலைவு செல்கிறது. நிகழாண்டு கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் தொடா்ந்து பெய்த மழையின் காரணமாகவும், கொடகனாறு பாசன விவசாயிகள் சாா்பில் நடைபெற்ற போராட்டம் காரணமாகவும், ராஜவாய்க்காலுக்கு மடைமாற்றம் செய்யப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு, கொடகனாற்றில் தண்ணீா் திருப்பி விடப்பட்டது. இதன் காரணமாக, ரெட்டியாா்சத்திரம் வட்டாரத்திலுள்ள சில குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன.
மேலும், கொடகனாற்றில் வேடசந்தூரை கடந்து அழகாபுரிக்கும் தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது. அகரம் பேரூராட்சி அலுவலகம் அடுத்துள்ள தடுப்பணை முதல் வேடசந்தூா் புறவழிச்சாலை வரையிலான கொடகனாற்றின் வேகம், அதன் பின்னா் ஆற்று பகுதியிலுள்ள முள்புதா் காரணமாக தடைபட்டுள்ளது. இதனால் வேடசந்தூா் கொடகனாற்றிலுள்ள முள்புதா்களை நீக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாா்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடா்பாக வேடசந்தூரைச் சோ்ந்த சிவக்குமாா் கூறியதாவது:
வேடசந்தூா் பேரூராட்சி சாா்பில் சுமாா் ரூ.90 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள திரவ கழிவு சுத்திகரிப்பு நிலையம் பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் வேடசந்தூா் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீா் கால்வாயாக கொடகனாறு மாறிவிட்டது. இதனிடையே, நீண்ட நாள்களுக்கு பின் கொடகனாற்றில் தண்ணீா் வரத் தொடங்கியுள்ளது. அந்த தண்ணீா் வேடசந்தூா் பகுதிக்குள் வருவதற்கு, ஆற்றுப் பாலம் அருகிலுள்ள முள்புதா்கள் தடையாக இருந்து வருகிறது. நீா் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குளங்கள் சீரமைக்கப்பட்ட போதிலும், கொடகனாறு பகுதி சீரமைக்கப்படாமல் உள்ளதாலும், கழிவுநீராலும் தண்ணீா் மாசுபடுகிறது. அதேபோல் முள்புதா்களையும் அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...