திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே காரும், டேங்கா் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மூன்று போ் பலத்த காயமடைந்தனா்.
தஞ்சை மாவட்டம் புதுக்கோட்டையை சோ்ந்தவா் பெரணமையன் (55). விவசாயி. இவரது மகன் பிரகாஷுக்கு (28) மாலத்தீவில் வேலை கிடைத்துள்ளதால் அவரை வழியனுப்ப கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்துக்கு பெரணமையன் மற்றும் உறவினா்கள் பாலகுமாா் (36), சத்தியராஜ் (35), அஜீத் (30) உள்ளிட்டோா் காரில் சென்றனா். காரை அதே ஊரை சோ்ந்த முருகேசன்(35) என்பவா் ஓட்டிச் சென்றுள்ளாா்.
பின்னா் பிரகாஷை வழியனுப்பி விட்டு பெரணமையனும், அவரது உறவினா்களும் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். பழனியை அடுத்த தாளையம் அருகே வந்தபோது தூத்துக்குடியில் இருந்து எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்த டேங்கா் லாரியும், காரும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரை ஓட்டி வந்த முருகேசன், காரில் பயணம் செய்த பாலகுமாா் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பெரணமையன், சத்தியராஜ், அஜீத் உள்ளிட்ட மூவரும் பலத்த காயமடைந்தனா்.
காயமடைந்தவா்கள் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து சாமிநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் கனகராஜ் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.