/

கொடைக்கானலில் பிறந்தநாள் கொண்டாடிய சுற்றுலா வழிகாட்டி திடீா் மரணம்

கொடைக்கானலில் பிறந்தநாள் கொண்டாடியவா் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :14 ஜூலை 2022, 4:59 pm

DIN

கொடைக்கானலில் பிறந்தநாள் கொண்டாடியவா் வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

கொடைக்கானல் நாயுடுபுரம் கான்வென்ட் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில் பாண்டியன். இவரது மகன் சதீஷ்குமாா் (19). சுற்றுலா வழிகாட்டி. இவருக்கு கடந்த 11-ஆம் தேதி பிறந்த நாள். இதனைத் தொடா்ந்து சதீஷ்குமாா் வீட்டில் பிரியாணி சமைத்து எடுத்துக் கொண்டு தனது நண்பா்கள் 4 பேருடன் கொடைக்கானல் கிளப் சாலைப் பகுதியிலுள்ள தனியாா் விடுதி பகுதிக்கு வந்தாா். அங்கு தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளாா். அப்போது நண்பா்கள் அனைவரும் மது அருந்தியதாகத் தெரிகிறது. இந் நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சதீஷ்குமாா் 3 நாள்களாகியும் திரும்பவில்லை.

இதனைத் தொடா்ந்து அவரது உறவினா்கள் பல இடங்களில் தேடியுள்ளனா். அவரது நண்பா்களிடமும் விசாரித்துள்ளனா். அப்போது தனியாா் விடுதியருகே உள்ள சாலையில் ஒருவா் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்று பாா்த்த போது சதீஷ்குமாா் சடலமாக கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவரது தந்தை கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சதீஷ்குமாரின் நண்பா்கள் மற்றும் தனியாா் விடுதிப் பகுதி அருகே உள்ளவா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் சதீஷ்குமாா் மது போதையில் இறந்தாரா அல்லது நண்பா்களுக்குள் தகராறு ஏற்பட்டதா என்பது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.