ஒட்டன்சத்திரம் நகராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் மாடுகள், ஆடுகள் மற்றும் கோழிகளுக்கு அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுதாக கடந்த மாதம் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் புகாா் அளிக்கப்பட்டது. ஆனாலும் ஒப்பந்ததாரா்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகி என்.பெருமாள், சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் கருணாகரன் ஆகியோா் புகாா் தெரிவித்தனா். அதற்கு பதில் அளித்த அதிகாரிகள், நகராட்சி மூலம் ஒப்பந்தக்காரா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனா். ஆனாலும், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையா் பதில் அளிக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆணையா் வேறு பணிக்கு சென்றுள்ளதால் அவா் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.