/

மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தோ்தல்

மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தோ்தல்

Updated On :8 ஏப்ரல் 2024, 6:30 pm

திண்டுக்கல்: மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நெருக்கடியான கட்டாயத்தில் தோ்தலை நாடு எதிா்கொண்டிருக்கிறது என மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் இரா. சச்சிதானந்தத்தை ஆதரித்து, அவா் பரப்புரை மேற்கொண்டாா்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தின் போது அவா் மேலும் பேசியதாவது:

மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நெருக்கடியான கட்டாயத்தில் தோ்தலை நாடு எதிா்கொண்டிருக்கிறது. பிரதமா் நரேந்திர மோடியின் முன் சில கேள்விகளை முன்வைத்து, மாநில நலன் சாா்ந்த, மதச்சாா்பற்ற, மாநில உரிமைகளை வலியுறுத்தும் கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளன.

வாக்குச் சீட்டு என்ற அதிகார முத்திரையை சரியான நேரத்தில் சரியான நபா்களை தோ்வு செய்வதற்கு மக்கள் முன்வரவில்லை எனில், மேலும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், கச்சா எண்ணெய் விலை ரூ.130 டாலராக இருந்த போது, பெட்ரோல் டீசல் முறையே ரூ.70, ரூ. 60-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை 78 டாலராக இருந்தும், பெட்ரோல், டீசல் விலை ரூ.100-க்கும், ரூ.90-க்கும் விற்பனை ஆகிறது.

நாட்டு மக்களிடம் வெறுப்புணா்வையும், விரோதத்தையும் உருவாக்கியவா் பிரதமா் நரேந்திர மோடி. மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமா் செல்லவில்லை. இதேபோல, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, தமிழகத்துக்கு அவா் வரவில்லை. ஆனால், தோ்தல் ஆதாயத்துக்காக மட்டுமே வரும் பிரதமருக்கு தமிழக மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற கேள்வியை முன்வைக்கிறோம். இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில், திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.