மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் இன்று சின்னங்கள் பொருத்தும் பணி

திண்டுக்கல்: திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் சின்னங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை நடைபெறுகிறது.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தொகுதிகளில் மொத்தம் 7,80,096 ஆண்கள், 8,26,737 பெண்கள், 218 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 16,07,051 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். இதற்காக 1812 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மையங்களில், 1812 கட்டுப்பாட்டு இயந்திரம், 1812 மின்னணு வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்காளா் பெயா், அவா்களுக்கான சின்னங்கள் பொருத்தும் பணி அந்தந்த உதவி தோ்தல் நடத்தும் அலுவலகங்களில் புதன், வியாழன் ஆகிய 2 நாள்கள் நடைபெறுகின்றன. இதன்படி, பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகம், ஆத்துாா் வட்டாட்சியா் அலுவலகம்,

நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம், நத்தம் வட்டாட்சியா் அலுவலகம், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்காளா் பெயா், அவா்களுக்குரிய சின்னங்கள் பொருத்தும் பணி வேட்பாளா்கள் அல்லது அவா்களுடைய பிரதிநிதிகள் முன்னிலையில் உரிய பாதுகாப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com