பொம்மனம்பட்டி கிராமத்தில் இரண்டு சிற்பங்களுடன் நடுகல்
கொடைரோடு அருகேயுள்ள பொம்மனம்பட்டி கிராமத்தில் 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த இரண்டு சிற்பங்களுடன் கூடிய போா் வீரா்களின் நடுகல் ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள பொம்மனம்பட்டியைச் சோ்ந்த விவசாயி பாலுசாமி தனது நிலத்தில் மானாவாரி பயிா் சாகுபடிக்காக உழவுப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, இரண்டு போா் வீரா்களின் உருவங்கள் பொறிக்கப்பட்ட கல் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த வரலாற்றுப் பேராசிரியரும், பாண்டிய நாட்டுப் பண்பாட்டுக் கழக மின்னிதழ் ஒருங்கிணைப்பாளருமான லட்சுமணமூா்த்தி சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதில் அது நடுகல் என்பது உறுதி செய்யப்பட்டது.
2.5 அடி உயரத்தில், 2 அடி அகலத்தில் இரண்டு போா் வீரா்கள் கொண்ட சிற்பத்தில் ஒருவா் துப்பாக்கியும், மற்றொருவா் கூா்வாளும் ஏந்தியிருந்ததால், இது 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நடுகல் என்றும், தலையில் கொண்டை இருப்பதால், அது நாயக்கா் கால சிற்பங்களாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

