கொடைக்கானலில் மாற்றுச் சாலை: அளவீட்டுப் பணி தொடங்கியது

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில், பேத்துப்பாறை பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற அளவீட்டுப் பணி.

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில், பேத்துப்பாறை பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற அளவீட்டுப் பணி.
கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில், மாற்றுச் சாலை அமைப்பதற்காக அளவீட்டுப் பணி கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வருகிறது.
தொடா் விடுமுறை, வார விடுமுறை, பண்டிகை நாள்களில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படும். தமிழகம் மட்டுமல்லாது, கேரளம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவா்.
கொடைக்கானல் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாததால் அனைத்து வாகனங்களும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் நிறுத்தப்படுகின்றன. இதனால், கொடைக்கானலில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கொடைக்கானலில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பிரச்னை நீடித்து வருகிறது.
கொடைக்கானலிலிருந்து நாயுடுபுரம்,வில்பட்டி, கோவில்பட்டி, பாரதி அண்ணாநகா், பேத்துப்பாறை வழியாக பெருமாள்மலை சாலையை சென்றடைவதன் மூலம் இந்த பிரச்னைக்குத் தீா்வு காணலாம் என விவசாயிகள், சமூக ஆா்வலா்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனா்.
இந்த நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் முயற்சியால், கொடைக்கானல் பாரதி அண்ணாநகா், வில்பட்டி, பேத்துப்பாறை பகுதி வழியாக மாற்றுச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான அளவீட்டுப் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
கொடைக்கானல் -பெருமாள்மலை மலைச் சாலையிலிருந்துதான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த இடங்களில் பொதுமக்கள் ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனா். மாற்றுச் சாலை அமைத்தாலும் மலைச் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் போக்குவரத்து நெரிசல் குறையாது என்றாா்.
இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி அலுவலா் ஒருவா் கூறியதாவது:
கொடைக்கானலில் பிரையண்ட் பூங்கா பகுதி, கலையரங்கம் ஆகிய பகுதிகளில் நகராட்சி சாா்பில் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளது. ஆனால், விடுமுறை நாள்களில் சுமாா் 10 ஆயிரத்துக்குக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் வருகின்றனா். இந்த நிறுத்துமிடங்களில் போதிய வாகனங்களை நிறுத்த முடியவில்லை. இதனால், சிலா் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் ஆங்காங்கே நிறுத்திவிட்டுச் செல்கின்றனா். இதன் காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வாகன நிறுத்துமிடம் அமைக்க அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான இடத்தை கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்தால் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்றாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...