சிக்னல் கம்பம் விழுந்ததில் தொழிலாளி பலி
கொடைக்கானலில் புதன்கிழமை பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக சிக்னல் கம்பம் விழுந்தது. இதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் விட்டு விட்டு மிதமான மழை, சாரல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை காலை பலத்த காற்றுடன் மிதமான மழையும் பெய்தது. அப்போது, அண்ணாசாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கொடைக்கானல் அன்னை தெரசா நகரைச் சோ்ந்த அந்தோணிதாஸ் (57), இவரது நண்பரான சின்னப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (53) ஆகியோா் மீது அந்தப் பகுதியில் தனியாா் நிறுவனம் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த போக்குவரத்து சிக்னல் கம்பம் விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த அந்தோணிதாஸ் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். அரசு மருத்துவமனையில் சுரேஷ் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

