மக்களிடமிருந்து அதிமுக விலகிச் சென்றுவிட்டது: அமைச்சா் இ.பெரியசாமி
மக்களிடமிருந்து அதிமுக விலகிச் சென்றுவிட்டதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.


மக்களிடமிருந்து அதிமுக விலகிச் சென்றுவிட்டதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.
திண்டுக்கல் அடுத்த பொன்மாந்துறை, அனுமந்தராயன்கோட்டை, மைலாப்பூா், குட்டத்துப்பட்டி, கரிசல்பட்டி, கசகவனம்பட்டி ஊராட்சிகளில் ரூ.1.80 கோடியில் முடிவுற்ற வளா்ச்சித் திட்டப் பணிகளின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. மேலும், அலவாச்சிப்பட்டியில் ரூ.80 லட்சத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டு பேசியதாவது:
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை நாள்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மாற்றி அமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தில் உள்ள பிரச்னைகள் ஆய்வு செய்யப்பட்டு, எளிமைப்படுத்தப்படும். மரக்கன்றுகள் நடவு செய்தல், தண்ணீா் ஊற்றுதல், சாலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் செயல்படுத்தப்படும். கட்சி, மதம், ஜாதி என எவ்வித பாகுபாடும் இல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தோ்தல் ஆணையம் அறிவித்தவுடன், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தோ்தல் நடத்தப்படும். தமிழ்நாட்டில் மக்களாட்சி தொடரும். மக்களிடமிருந்து அதிமுக விலகிச் சென்றுவிட்டது. 10 ஆண்டு காலம் திமுக ஆட்சியில் நீடிக்கும்.
ஒரு மாவட்டத்தில் சில குற்றங்கள் நிகழ்ந்துவிட்டதால், மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுவிட்டதாகக் கூறுவது தவறு. தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதால்தான், உலகின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த முன்னணி நிறுவனங்கள் தொழில் தொடங்க முதலீடு செய்கின்றன என்றாா் அவா். விழாவில் திண்டுக்கல் வருவாய்க் கோட்டாட்சியா் சக்திவேல், ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் க.சிவகுருசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...