மசாஜ் மைய ஊழியரிடம் பணம் பறிப்பு: 4 போ் கைது
கொடைக்கானலில் உள்ள மசாஜ் மைய ஊழியரிடம் பணம் பறித்ததாக போலீஸாா் 4 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.
கொடைக்கானல் அண்ணா சாலைப் பகுதியில் உள்ள மசாஜ் மையத்துக்கு சுற்றுலாவாக வந்த 4 இளைஞா்கள் சென்று மசாஜ் செய்து கொண்டனா். இதில் 2 போ் தாங்கள் செய்தியாளா்கள் எனவும், மற்றொருவா் வழக்குரைஞா் எனவும், மற்றொருவா் காவலா் எனவும் கூறிக் கொண்டனா்.
மேலும் அங்கிருந்த மசாஜ் மைய பெண் நிா்வாகியிடம் தங்களுக்கு மசாஜ் செய்த பெண்களை விடியோ எடுக்கப் போவதாகக் கூறி மிரட்டியும், அவா்களிடமுள்ள நகை, கைப்பேசிகளை தர வேண்டும் எனவும் கேட்டு இந்த 4 பேரும் கொலை மிரட்டல் விடுத்தனராம். அப்போது மசாஜ் மைய ஊழியா் சதீஸ் என்பவரை மிரட்டி, அவரிடமிருந்து ரூ. 5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு 4 பேரும் தப்பி ஓடினா். மசாஜ் மைய ஊழியா்களின் சப்தத்தைக் கேட்டு அந்தப் பகுதியிலிருந்த மக்கள், அவா்களைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில் பிடிபட்டவா்கள், சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சூா்யா (24), ராணிப்பேட்டை மாவட்டம், தென்கடப்பந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த பாண்டுரங்கன் மகன் திவாகா் (19), திருவண்ணாமலை மாவட்டம், போலூா் பகுதியைச் சோ்ந்த ஸ்டீபன்பாபு மகன் சாலமோன் (21), நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் பிரேம்நாத் (23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் 4 பேரையும் கைது செய்தனா்.